கிளிநொச்சி: வடமாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் பட்சத்தில் வடபகுதி மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மென்மேலும் அபிவிருத்தி காண முடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஏ9 பாதையை வைபவரீதியாக திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார்; என்னை சந்திக்கின்ற போதெல்லாம் எடுத்துக் கூறிவருகின்றனர்.
இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ வேண்டும். வடபகுதியின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டே நாம் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்தவகையில்தான் தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம், சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை வழங்கி வருகின்றோம்.
இருந்தபோதிலும் மக்கள் மீண்டும் இருள்மயமான வாழ்வை வாழ வேண்டுமென்பதற்காக சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இதுவிடயத்தில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
கடந்த முப்பது வருடகாலமாக மக்கள் பட்ட துன்ப துயரங்களை நான் நன்கறிவேன் யுத்தகாலப்பகுதியில் இழந்தவற்றை நாம் மீண்டும் பெற்றுக் கொண்டு வருகின்றோம். அந்தவகையில் தற்போது புதிய வசதிகளுடன் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த முப்பது ஆண்டு காலமாக யுத்தம் நடைபெற்று வந்த போதிலும் அபிவிருத்தி நான்கு ஆண்டுகளில் எவ்வாறு? மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை மக்களாகிய நீங்களே அறிந்து கொள்ள முடியும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பகுதியில் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், வர்த்தகம், மின்சக்தி வங்கி அலுவல்கள் ஆகியவற்றுடன் பாதை அபிவிருத்தி என பல்வேறு அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்து வந்துள்ளோம்.
இதுமட்டுமல்லாது வடமாகாண சபை தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்களுக்கு தாம் விரும்பும் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் சுதந்திரமுண்டு என்பதுடன், நீங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் ஊடாக மேலும் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாகவும் இப்பகுதி மேலும் அபிவிருத்தி காணும் என்பதுடன் இந்நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழும் வகையில் எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
கிளிநொச்சி ஏ9 வீதியில் மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி ஏ9 வீதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்ததுடன், திறப்பு நிகழ்வின் நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்து வைத்தார்.
சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சீனா நாட்டின் பிரதித்தூதுவர் வூ ஜியாங் ஹால் ஒ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
பாடசாலை மாணவர்கள் ஒருதொகுதியினருக்கு பணம் வைப்பலிடப்பட்ட வங்கிப்புத்தகங்களும், பல்கலைக் கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களும் பாடசாலை புத்தகப்பைகளும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவில் அங்கு வருகைதந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன் அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸநாயக்க, ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அரச அதிபர்கள் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் இராணுவப் படையதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் பாடசாலை மாணவர்கள் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்




Leave a comment