பழுளுல்லாஹ் பர்ஹான்
ஓட்டமாவடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘செஹினயா’ திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்டம்’ நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக கண்டி விசேட தேவையுடையோர் பாடசாலையிலிருந்து சுமார் 45விசேட தேவையுடைய இளைஞர்கள் மட்டக்களப்பு ஓட்டமாவடி விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு அண்மையில் வருகை தந்ததாக ஓட்டமாவடி விசேட தேவையுடையோர் பாடசாலை ஸ்தாபகர் எம். பி. எம். சித்தீக் தெரிவித்தார்.
குறித்த கண்டி விசேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் ஓட்டமாவடி விசேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுடன் தத்தமது கலாச்சார அம்சங்களை பகிர்ந்து கொண்டதுடன் ஏனைய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பில் உல்லாசப் பிரதேசமான பாசிக்குடாவுக்கு சென்றதுடன் தொப்பிகலை மலை (குடும்பி மலை) உள்ளிட்ட இடங்களுக்கு விஜயம் செய்தது மாத்திரமில்லாமல் சிரமதானம் மற்றும் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டனர். இதேவேளை மீண்டும் ஓட்டமாவடி விசேட தேவையுடையோர் பாடசாலையிலிருந்து மாணவர்கள் இம்மாதம் 25ம் திகதி கண்டி விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு செல்லவுள்ளதாக ஓட்டமாவடி விசேட தேவையுடையோர் பாடசாலை ஸ்தாபகர் எம்.பி.எம்.சித்தீக் தெரிவித்தார்.
‘செஹினயா’ திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்ட ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி அமைச்சர் ஹாபிஸ் நஸீர அஹமத், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தவராஜா, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே. பீ. எஸ். ஹமீட், கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் நயீம்,இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment