கொழும்பு: 13 வது திருத்தச் சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டு வருவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டபோது, அங்கு வாதப்பிரதிவாதங்களும் வாய்த்தர்க்கங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்களான விமல் வீரவன்சவுக்கும் டியு குணசேகரவுக்குமிடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், விமல் வீரவன்சவிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம், 13வது திருத்தத்துக்கு எதிராக 10 மில்லியன் கையெழுத்துப் பெறும் நீங்கள் எதற்காக அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கையெழுத்துப் பெறவில்லை? என்று கேள்வி எழுப்பிய போதே கொந்தளிப்பாக சூழல் எழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13வது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கு முதலில் வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை அறிய வேண்டும் என்றும் அதன் பின்னரே தெற்கில் அதனைப் அறிய வேண்டும் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதன்போது ஹக்கீக்கு ஆதரவாக டியூ.குணசேகரவும் கடுமையான வாக்குவாதம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவைக் கேட்டபோது, அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவது தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை நடத்தும் வகையில் குறித்த சட்டமூல திருத்த யோசனைகள் தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் ஹெகலிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 13 ஆவது திருத்தம் தொடர்பில் வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் அவசர சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
அதற்கு முன்னர் 13வது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தவொரு கட்சியோ தெரிவுக் குழுவிற்கு வந்தாலும் வரவிட்டாலும் அதன் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும்.
குறித்த திருத்தச்சட்டமூலத்தை திருத்தியமைத்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.
13வது திருத்தச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களை காலதாமதப் படுத்தாமல் கூடிய விரைவில் நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டார். TW
Leave a comment