முஸ்லிம் எய்ட் ஏற்பாட்டில் சேருவில, கந்தளாய் மாணவர்களுக்கு கண்பரிசோதனையும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்குதலும்

muslim-aid– பஹ்மியூஸூப்

கந்தளாய்: கிராமப்புறங்களில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் வறுமை, போசாக்கின்மை, அறியாமை போன்ற காரணங்களினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இவர்கள் பல்வேறு கண்பார்வைக் குறைபாடுகளினால் துன்புற்று வருகின்றனர் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சரியான கண்பார்வையின்றேல், இளம் மாணவர்களின் கல்வியும் அதன் காரணமாக அவர்களின் எதிர்காலமும் இருண்டதாகி விடுகின்றது. இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக முஸ்லிம் எய்ட் சிறிலங்கா கிராமப்புற வறிய மாணவர்களில் கண்பார்வை குறைபாடுடையவர்களின் கண்களைச் சோதித்து இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாக, யுத்தம் மற்றும் வறுமை என்பவற்றால் பாதிக்கப்பட்ட சேருநுவர, கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களிலுள்ள மூன்று சமூகங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ‘கிராமிய சிறார்களுக்கு கண்பார்வை வழங்குவோம்’ (Vision of the Rural Children– 2013) என்ற தொணிப்பொருளின் கீழ், ஜுன் மாதம் 15ம் 16ம் திகதிகளில் இலவச கண் சோதனை முகாமை முஸ்லிம் எய்ட் நடாத்தவுள்ளது. இச் சோதனையின் போது பார்வைக் குறைபாடு உடையவர்கள் என இனங்காணப்படும் மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. 200 மாணவர்கள் வரை கண் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

15ம் திகதி சனிக்கிழமை கந்தளாய் ஆதார வைத்தியசாலையிலும்  16ம் திகதி சேருநுவர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் காலை 9:30 மணி தொடக்கம் பி.ப.4:30 வரையிலும் பாடசாலை மாணவர்களுக்கென நடைபெறவுள்ள இலவச கண்சோதனை முகாம் நிகழ்வினை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா பிராந்திய அலுவலக ஊழியர்கள், உள்ளுர் பங்காளர் அமைப்புகளான ரெக்டோ, ஹோப் ஒப் பீப்பிள் மற்றும் தடயம் ஆகியவற்றின் முழுமையான ஒத்துழைப்புடன் நடாத்தவுள்ளது. கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் கண் சோதனை வைத்தியர் மற்றும் கண் சிகிச்சை தொடர்பான ஊழியர்கள் தமது நிபுணத்துவப் பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளனர்.

‘முஸ்லிம் எய்ட் தினத்தை’ முன்னிட்டு  சென்ற வருடம் நவம்பர் மாதம் 20ம் 21ம் திகதிகளில் ஹொரபொதான மற்றும் மூதூர் பாடசாலைகளைச் சேர்ந்த  154 மாணவர்கள் இலவச கண்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் 62 மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  

Published by

Leave a comment