கொழும்பு: கடற்றொழிலாளர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்துகொள்ளாத மீனவர்கள் எவரும் ஜனவரி முதல் கடற்றொழிலுக்கு செல்ல முடியாது என்ற நடைமுறை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அத்துடன் அனர்த்தங்கள் குறித்து மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவும் ஏனைய நாடுகளின் கடல் பரப்பினுள் நுழைவதை தடுக்கவும் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘படகுகள் கண்காணிப்பு செயல்முறை (VMS – Vessel Monitoring System) ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
காலநிலை முன்னெச்சரிக்கை விடும் முறையிலுள்ள தொழில்நுட்ப தவறினாலே மீனவர்கள் பலர் பலியாகினர். காலநிலை அவதான நிலையத்தின் தவறல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப் பட்டுள்ள போதும் அவர்கள் அவற்றை பயன்படுத்துவதில் அக்கறை கட்டாதிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடும் காற்றினால் பல மீனவர்கள் இறந்தது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இவ்வாறான அனர்த்தங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
மேலும் இரு மீனவர்களின் சடலங்கள் நேற்று கண்டுபிடிக் கப்பட்ட நிலையில் அனர்த்தத்தினால் இறந்தோர் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் காணாமல் போயுள்ளனர். முற்றாக அழிந்த மற்றும் காணாமல் போன படகுகளின் தொகை 84 ஆகும். 76 படகுகள் போதியளவு சேதமடைந்துள்ளன.
2011 ஆம் ஆண்டும் இதே போன்று ஏற்பட்ட கடும் காற்றினால் 26 மீனவர்கள் பலியானார்கள். அன்றும் மீனவர்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்கப்படவில்லை. வேறு நாடுகளில் 48 மணி நேரத்திற்கு முன்னரே காலநிலை குறித்த எதிர்வு கூறல்கள் துல்லியமாக கணித்து வழங்கப்படுகிறது. ஆனால் எமது நாட்டில் அவ்வாறு துல்லியமாக முன்கூட்டி தகவல் வழங்கக் கூடிய நவீன தொழில் நுட்ப வசதி கிடையாது.
மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை கடும் காற்று வீசும் என முன்னெச்சரிக்கை செய்தால் மட்டுமே மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லாதிருப்பர். 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக அறிவித்தாலும் அவர்கள் கடலுக்கு செல்வார்கள். ஒரு நாள் மீன் பிடியில் ஈடுபடும் படகுகளுக்கு அனர்த்தங்கள் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்க எமக்கு எதுவித வழியும் கிடையாது. முன்கூட்டி காலநிலை எச்சரிக்கை வழங்குவதன் மூலமோ வானொலியில் அறிவிப்பதினூடாகவோ தான் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்க முடியும். எமக்கு உரிய நேரத்தில் காலநிலை அறிக்கை கிடைக்காததால் மீனவர்களை எச்சரிக்க முடியவில்லை.
ஐரோப்பா போன்ற நாடுகளில் நவீன வள்ள முன்னெச்சரிக்கை முறை பின்பற்றப்படுகிறது. இதனூடாக மீனவர்களுக்கு முன்கூட்டி துல்லியமான எதிர்வுகூறல்கள் வழங்கப்படுகிறன. இந்த தொழில் நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்காக செய்மதி நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளோம். இது தொடர்பாக எமது தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் துரிதமாக இந்த நவீன தொழில்நுட்ப முறையை இலங்கையில் அறிமுகம் செய்ய உள்ளோம். அதன் மூலம் தென்ஆசியாவில் வி. எம். சி. முறையை பயன்படுத்திய முதல் நாடாக இலங்கை மாறும்.
இந்த செய்மதி சேவையை பெற 4 மில்லியன் யூரோக்கள் செலவிட உள்ளோம். இதற்காக கருவிகள் சகல ஆழ்கடல் படகுகளில் பொருத்தப்படும். இதற்கு 6 1/2 இலட்சம் ரூபா மீன்பிடி படகு உரிமையாளர்கள் செலவிட வேண்டும். இதற்காக குறைந்த வட்டியில் நீண்ட கால கடனுதவி திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளோம்.
செய்மதியினூடாக படகுகளுக்கு 48 மணி நேரத்துக்குமுன் காலநிலை குறித்து முன்னெச்சரிக்கை வழங்கப்படும். இது தவிர வேறு நாட்டு கடல் எல்லைக்கு செல்ல முற்பட்டால் படகுகளில் உள்ள இயந்திரத்தில் சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்து முன்னெச்சரிக்கை மணி அடிக்கும். கடலில் அதிக மீன்கள் உள்ள இடங்கள் குறித்தும் இந்த முறைமையின் கீழ் மீனவர்களுக்கு தகவல் வழங்கப்படும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருநாள் மீன் பிடிப்படகுகளுக்கு மீன்பிடித் திணைக்கள நடவடிக்கைப் பிரிவு தகவல்களை வழங்கும். இது தற்பொழுது பயன்பாட்டிலுள்ள ஜி. பி. எஸ். (மி. ஜி. ஷி.) முறையை விட பல மடங்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட முறையாகும்.
காலநிலை அவதான நிலைய அறிக்கையை எதிர்பார்த்திருக்காது இந்த முறைமையினூடாக மீனவர்களுக்கு துல்லியமாக முன்னெச்சரிக்கை வழங்கமுடியும்.
தற்பொழுதுள்ள ஒழுங்கு விதிகளின் படி காலநிலை அவதான நிலைய முன்னறிவிப்பை மட்டுமே எமக்கு பின்பற்ற முடியும். வேறு நாட்டு முன்ன றிவிப்புகளை இணையத் தளங்களினூடாக பெற்று அறிவிக்க முடியாது.
முழு நாட்டிலும் கடும் காற்று வீசினாலும் குறைந்தளவு படகுகளே பாதிக்கப்பட்டன. 23 ஆயிரம் படகுகளில் சிலவையே கடலுக்கு சென்றன. ஏனைய படகுகள் முன்னறிவிப்பை ஏற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீனவர்களுக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அவர்கள் பயன்படுத்துவதில்லை. பாதுகாப்பு அங்கி பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தினாலும் மீனவர்கள் அதனை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
மீனவர்களுக்கான காப்புறுதி திட்டத்தில் குறைந்தளவு மீனவர்களே இணைந்துள்ளனர். இறந்த 51 மீனவர்களில் 4 பேர் மட்டுமே காப்புறுதி செய்துள்ளனர். வருடாந்தம் 750 ரூபா மட்டுமே மீனவரிடம் அறவிடப்படுகிறது. காப்புறுதி செய்யாத மீனவர்களின் குடும்பங்களுக்கும் இம்முறை ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.
Leave a comment