கொழும்பு: அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் கை வைக்கக்கூடாது. அதற்கான காரணங்களை விளக்கி 13 பக்கங்களிலான அவசரக் கடிதம் ஒன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ளது.
நேற்று பிற்பகல் 1 மணிக்கு மேற்படி அவசரக்கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார்.
அதிகாரப்பகிர்வு மற்றும் கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் கடந்த டிசெம்பர் மாதம் பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனைகள் போன்றவை உட்பட பல்வேறு விடயங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஹசன் அலி எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில்,
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆளும் தரப்பிற்குள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க பிரேரணைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது. ஏனெனில், மாகாண சபை முறைமையோ 13ஆவது திருத்தச் சட்டமோ இலங்கை அரசியலில் புதிய விடயமல்ல. சிறுபான்மை இன மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே மேற்படி திருத்தச் சட்டம் ்கொண்டுவரப்பட்டது.
தற்போதைய ஆளும் கட்சியுடன் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளிலும் அதிகாரப் பகிர்வின் முக்கியத்துவம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளோம். அடிமட்ட போராளிகளைக் கொண்ட அரசியல் கட்சி என்ற வகையில் கடந்த டிசெம்பர் மாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 1500 மேற்பட்ட உறுப்பினர்களுடன் கூடிய கட்சி பேராளர் மாநாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தின் முக்கியத்துவமும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பிலும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இது குறித்து அரசாங்கத்திற்கு விளக்கமளித்துள்ளோம்.
அதேபோன்று கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் அம்மாகாணத்தில் ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸிலம் காங்கிரஸின் ஆதரவை அரசாங்கம் கேட்டபோது, அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒப்பந்த ரீதியாக இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம். இந்நிலையில் திடீரென 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கவோ, மாகாண சபை முறைமையை ரத்துச் செய்யவோ, அதிகாரப்பகிர்வை வழங்காமல் விடவோ அரசாங்கம் நேரடியாக நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு ஒத்துழைக்கப் போவதில்லை.
ஏனெனில், அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசும் முஸ்லிம் காங்கிரஸும் பல ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன. இவற்றை விளக்கியே ஜனாதிபதிக்கு 13 பக்கங்களில் அவசர கடிதத்தை அனுப்பி 13ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச்செய்ய முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம். அமைச்சரவைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வருவதாயின் அதனை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்.
மறுபுறம் ஆளும் கட்சிக்குள் உள்ள குறிப்பிட்ட சில சிங்கள பேரினவாதக் கட்சிகளின் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும். எனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி அனுப்பும் இவ் அவசரக் கடிதம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவாரென நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
-வீரகேசரி
Leave a comment