கொழும்பு: பிரித்தானியா, இலங்கையில் ஒரு புதிய அதிவேகப்பாதை விஸா சேவையொன்றை இம்மாதம் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் விண்ணப்பதாரிகள் வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை என்பதாக பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வகையான அதிவேகப்பாதை விஸா விண்ணப்பங்களை உள்துறை அலுவலகம் துரிதப்படுத்தி ஐந்து வேலைநாட்களுக்குள் ஆவணங்களை திருப்பியனுப்பிவிடும். இந்த சேவைக்காக 10 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும் என்று கொழும்பிலுள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் www.visa4uk.fco.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள (Reservation) முடியும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
தற்பொழுது இருக்கும் வழமையான சேவையின்படி, சுமார் 2 தொடக்கம் 6 வாரங்கள் வரை விண்ணப்பதாரிகள் விசா பெறுவதற்காக காத்திருக்கவேண்டிய நிலை இலங்கையில் இருந்து வருகிறது.
இந்நடைமுறை ‘விசிட் விசா’ பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர் விசாவுக்கு இம்முறை பொருந்தாது எனவும் கொழும்பு பிரித்தானிய விசா அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
![british-flag[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/british-flag1.jpg?w=150&h=90)
Leave a comment