லண்டன்: நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு தென்கிழக்கு லண்டனில் ‘சைலர்ஸ்ட்’ எனும் இடத்தில் அமைந்துள்ள தாருள் உழூம் இஸ்லாமிய பாடசாலைக்கு இனந்தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 22ம் திகதி லண்டன் ‘வூல்விச்’ நகரில் சிவில் உடையில் சென்றுகொண்டிருந்த பிரித்தானிய படை வீரர் லீ ரிக்கியின் படுகொலையைத் தொடர்ந்து இன்றுவரை முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில இடங்களில் பதட்டம் நிலவி வருகின்றது.
இப்படைவீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதன் பின்னர் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன.
அவற்றுள் முக்கியமாக அச்சு ஊடகங்களைக் குறிப்பிட முடியும். ஒரு முஸ்லிமின் குறையை கண்டு பிடிக்கும் பட்சத்தில் ‘ஜிஹாத் மனிதர் ‘ (Jihad Man) என்ற தொணியில் தலைப்பிட்டு, அங்குள்ள அச்சு ஊடகங்கள் சம்பவங்களைத் திரிவு படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக முஸ்லிம்களை மறைமுகமாக எதிர்ப்பதற்காகவும் ஆங்கில தேசத்தை பாதுகாப்பதற்காகவும் அங்கு தற்பொழுது EDL (English Defence League) எனும் ‘ஆங்கில பாதுகாப்பு முன்னணி’ என்ற ஓர் இயக்கம் எழுச்சி கண்டு வருகின்றனது. இவ்வியக்கத்தில் இளைஞர்கள் தற்பொழுது இணைந்து வருகின்றனர்.
குறித்த பாடசாலைக்கு தீவைக்கும் போது இப்பாடசாலைக் கட்டடங்களில் மொத்தம் 130 மாணவர்களும், இப்பாடசாலையின் நிர்வாகிகள் சிலரும் தங்கி இருந்தனர். பாடசாலையின் இரு கட்டடங்கள் தீப்பற்றின. தீப்பிளம்பு எழுவதற்கிடையில் அவசரமாக தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து, அங்கு தங்கி இருந்தவர்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வதில் ஈடுபட்டனர்.
இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீ வைக்கப்பட்ட சுவர்களில் EDL எனும் எழுத்துக்கள் ‘ஸ்பிரே பெயின்ட்’ மூலமாக எழுதப்பட்டும் இருந்தன.
‘சனிக்கிழமை இரவு இருவர் தங்களது பாடசாலைக்கட்டடத்துக்கு தீ வைக்கும் காட்சி எமது இரகசிய கமெரா படமெடுத்துள்ளது’ என பாடசாலை பேச்சாளர் சயிட் மஹ்மூத் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கின்றார்.
தலையை மறைத்து வந்த இரு இளைஞர்கள் பாடசாலைக் கட்டடத்துக்கு தீ வைப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால், இதன் பின்னணியில் செயல்படும் இருவரை சந்தேகத்தின்பேரில் லண்டன் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
24 மணித்தியாலங்களும் வீதி ரோந்தில் பொலிஸார் உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ரிக்கியின் கொலையை சமூக விரோதச் செயல்களுக்கு தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லண்டன் மீட்ரோ பொலிடன் பொலிஸ் ஆணையாளர் சேர் பேர்ணார்ட் ஹோகன் தெரிவித்துள்ளார்.
” நாங்கள் பிரித்தாணியர்கள். இந்நாட்டு மக்களின் மத, கலாச்சார, சமாதான விடயங்களுக்கு ஒத்துழைப்பதில் எங்களுக்கும் கடமை இருக்கின்றது. இக்கொலையைப் புரிந்தவர்களை நாங்கள் பகிரங்கமாகக் கண்டித்திருந்தோம். இஸ்லாம் ஒரு போதும் இவ்வாறான கொலைகளை புரிவதற்கு அனுமதிக்கவில்லை. இக்கொலையின் பின்னர் முஸ்லிம்கள் மீது திருப்பப்படும் இவ்வாறான் சமூக விரோதச் செயல்கள் குறித்து தான் அதிர்ச்சியடைகிறேன்” என்பதாக சயிட் மஹ்மூத் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் “லீ ரிக்கியின் கொலையை எந்தவொரு சமூக, கலாச்சாரத்திற்கு எதிராகவும் திசை திருப்பாதீர்கள். லீ ரிக்கியின் கொலைக்கு பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து மதத்தினரும், அமைப்புக்களும் கண்டனங்களையும், ஆறுதல்களையும் தங்களுக்குத் தெரிவித்தே வருகின்றனர். எனவே தயவு செய்து லீ ரிக்கியின் கொலையை எவருக்கும் எதிராக திசை திருப்பாதீர்கள்” என கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய படை வீரரின் பெற்றோரும், மனைவியும் பொதுமக்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
லீ ரிக்கியின் கொலையை அடுத்து முஸ்லிம்களின் அடையாளங்கள் மீது தீ வைக்கப்படும் இரண்டாவது சம்பவம் இதுவாகும். சென்ற புதன்கிழமை முஸ்வெல் ஹில் எனப்படும் அர்-ரஹ்மா இஸ்லாமிய சமூக நிலையம் மீது இவ்வாறான தீ வைப்பு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment