லண்டன்: பிரிட்டிஷ் பிரஜைகள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்துவந்து குடியிருப்பதில் உள்ள குறைந்தபட்ச வருமானம் ரீதியான கட்டுப்பாடுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு குடிவரவு தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய பொருளாதார வலய நாடுகளுக்கு வெளியில் இருந்துவரும் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டுமானால் பிரிட்டிஷ் பிரஜைகள் குறைந்த பட்ச வருமானத் தொகையொன்றைக் காட்டவேண்டுமென்ற புதிய கட்டுப்பாடு ஓராண்டுக்கு முன்னர் வந்தது.
வாழ்க்கைத் துணை ஒருவரை பிரிட்டனுக்கு அழைத்துவந்து குடியிருக்க வேண்டுமானால் பிரஜை ஒருவர், ஆண்டுக்கு 18 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளை சம்பாதிப்பவராக இருக்கவேண்டும்.
அதேபோல பிள்ளை ஒன்றை அழைக்க வேண்டுமானால் அந்தத் தொகை 22,400 பவுண்டுகள் வரை உயர்கின்றது. அதன் பின்னர் ஒவ்வொரு பிள்ளைக்கும் 2,400 பவுண்டுகள் வரை கூடுதலாக வருமானம் இருக்கவேண்டும்.
இவ்வாறான வருமானம்-ரீதியான கட்டுப்பாடுகள் குடும்பங்களை துண்டாடுவதாக நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, பிரிட்டனில் வரிசெலுத்தும் மக்களின் மீது சுமை சுமத்துவதைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறான சட்டங்கள் தேவைப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.
Leave a comment