கொழும்பு: சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் காற்றினால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தினால் 37 மீன்பிடி படகுகளும் 32 மீனவர்களும் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன தெரிவித்தார். திடீரென வீசிய கடுமையான காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 35 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 14 படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பலத்த காற்றினால் 772 குடும் பங்களைச் சேர்ந்த 1446 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதேநேரம் 2286 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் ஐந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.
கொழும்பு, தெஹிவளை, களுத்துறை, பேருவளை, காலி, பலப்பிட்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய கரையோர பிரதேசங் களில் இருந்து மீன்பிடிக்கும் பொருட்டு கடலுக்குச் சென்ற மீனவப் படகுகளே அனர்த்தத்தில் சிக்கியுள்ளதுடன், காணாமல் போயுள்ளன.
இவ்வாறு காணாமல் போன மீனவர் களையும், மீன்பிடி படகுகளையும் தேடிக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு கடற்படையின ரும், விமானப் படையினரும் நேற்றைய தினமும் தொடர்ச்சியாக தேடுதல் பணி யிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டதாக கடற்படை மற்றும் விமானப் படைப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான படகுகள் காணாமல் போயுள்ளதால், தமது தேடு தல் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப் படுத்தும் வகையில் கடற்படையினர் தேடும் பணியில் ஈடுபடுத்தும் கப்பல் களினதும், அதிவேக படகுகளினதும் எண்ணிக்கைகளை அதிகரித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இதற்கமைய, கடற்படையின் சமுதுர, சயுர, சுரணிமல, ஜயசாகர ஆகிய கப்பல்களுடன் மேலதிக ஐந்து அதிவேக படகுகளும், நான்கு துரித மீட்புப் படகு அணிகளும், 10 டோராக்களும் மீட்புப் பணிகளில் நேற்றைய தினம் ஈடுபடுத்தப் பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளின் மூலம் 18 மீனவர்களை கடந்த இரு தினங்களுக்குள் மீட்டெடுத் துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்த சுரணிமல என்ற கப்பல் இரத்மலானை கடற்பரப்பிலிருந்து படகு ஒன்றுடன் நான்கு மீனவர்களையும் இந்துருவ கடற்பரப்பிலிருந்து நான்கு மீனவர்களையும் மீட்டெடுத்துள்ளதுடன், உயிரிழந்த மீனவர்கள் பலரது சடலங்களையும் மீட்டெடுத்துள்ளது.
பம்பலப்பிட்டி முதல் காலி வரையிலான கடற்பரப்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விமானப் படை
இதேவேளை, பாதிக்கப்பட்ட மற்றும் ஆழ் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை களில் விமானப் படையின் விமானங்களும், ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
அதி முக்கிய பிரமுகர்களின் பயணங் களுக்காக பயன்படுத்தப்படும் பெல் – 412 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டும், விமானப் படையின் வை-12 ரக விமா னமும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டி ருந்ததாக விமானப் படைப் பேச்சாளர் எயார் கொமடோர் என்ரு விஜேசூரிய தெரிவித்தார்.
இந்துருவ கடற் பிரதேசத்தில் நபர் ஒருவர் தத்தளித்துக்கொண்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து வழமைக்கு மாற்றமாக நேற்று முன்தினம் இரவு நேர மீட்புப் பணியிலும் விமானப் படையின் பெல் – 412 ஹெலிகொப்டர் விசேட மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
கட்டுக்குருந்தையிலிருந்து நேற்று முன்தினம் பறந்த ஹெலிகொப்டர் பலப்பிட்டியைச் சேர்ந்த என்.கே. ஆனந்த என்பவரை பாதுகாப்பாக மீட்டெடுத்து மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன மீனவர்களை தேடிக் கண்டுப்பிடிக்கும் பொருட்டு நேற்றைய தினமும் விமானப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டி ருந்தனர். விமானப் படையிடம் உள்ள அதி நவீன கண்காணிப்பு விமானமான “ கிலீaணீh றிing திir ” என்றழைக்கப்படும் கண்காணிப்பு விமானம் நேற்றைய தினம் விசேட கண்காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டிருந்தது.
இரத்மலானையிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் கொள்ளுப்பிட்டி தொடக்கம் காலி வரையிலான கடற்பரப் பிலும், ஆழ்கடல் பகுதிகளிலும் பறந்து கண் காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத் தப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக சுமார் ஆறு மணித்தி யாலங்கள் பறக்கக்கூடிய இந்த விமானத்தில் அதி நவீன கமராக்கள் மற்றும் கண்காணிப்பு இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், மேற்படி கெமராக்களின் உதவியுடன் இந்த விமானம் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள், சிக்கியுள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டார்.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்களை முழுமையாக மீட்டெடுக்கும் வரையும், அவசர தேவைகளைக் கருத்திற் கொண்டும், கூட்டு மீட்பு மற்றும் தேடு தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளதாக விமானப் படை மற்றும் கடற்படை பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
சீரற்ற கால நிலை, கடுமையான காற்று, கடற் கொந்தளிப்பு தன்மைகளுக்கு மத்தியிலும் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த மீட்புப் பணிகளை விமான மற்றும் கடற் படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் இராணுவம் மற்றும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.
– தினகரன்

Leave a comment