கொழும்பு: இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழக்பெரும 13 பல்கலைக்கழக கல்லுரிகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாண பணிகளுக்காக 3,173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பெல்வூட் அழகியற்கலை மையத்திலும் சபுகஸ்கந்த தொழில் பயிற்சி மையத்திலும் இரண்டு பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவப்படும். ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார கல்விக்கான பல்கலைகழக கல்லூரி நிறுவப்படும்.
அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியில் தேசத்திற்கு மகுட கண்காட்சிக்காக நிறுவப்பட்ட புதிய கட்டிடங்களில் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்படும். இதற்கு மேலதிகமாக 09 பல்கலைக்கழக கல்லூரிகளை இரத்மலான, குளியாபிட்டிய, தலல்ல, பத்தேகம, கட்டுநாயக்க, அநுராதபுர, பொரல்ல, கட்டுபத்த மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிறுவ அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் டலஸ் அழக்பெரும அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அலுவலகத்தில் இடம்பெற்ற தனது பேட்டியில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், 25 பல்கலைக்கழக கல்லூரிகள் நிறுவப்படவுள்ளதாகவும், ரிதிதென்னயில் அதற்கான காணியை அரசாங்கம் வழங்கி இருப்பதாகவும் உள்ளுர் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்பொழுது 13 கல்லூரிகள் அமையப் பெறும் இடங்களையே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.
எனவே ஆரம்பத்திலேயே சில முரண்பாடுகளைக் கொண்டு இடம்பெறும் இப்பல்கலைக்கழக கல்லூரி அமைப்பு விடயங்களில் உரியவர்கள் அவதானமாகவும், நிதானமாகவும் செயற்படுமாறு கேட்கப்படுகின்றனர்.
![diploma%20hat[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/diploma20hat1.jpg?w=150&h=116)
Leave a comment