கொழும்பு: தெற்கு மற்றும் மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென நிலவிய கடும் காற்றுடனான காலநிலை காரணமாக மூன்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்ததுடன், 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 30 வள்ளங்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்கும் பணிகளில் விமானப் படையினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
தெய்வேந்திரமுனை, பலப்பிட்டி, காலி, பேருவளை, தெஹிவளை உள் ளிட்ட கரையோர பிரதேசங்களில் கட லுக்கு மீன்பிடிக்கச்சென்ற பல மீனவப் படகுகள் காணாமல் போயுள்ளன.
நாட்டில் நிலவும் மோசமான கால நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு இராணு வத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலில் மீன்பிடிக்கச் சென்று கடும் காற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினரின் மூன்று கப்பல்கள் சேவையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளன. ஜயசாகரா, நந்திமித்ர மற்றும் சயூர ஆகிய மூன்று கப்பல்களுமே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். ஜயசாகர, காலியிலிருந்தும், நந்தமித்ர மற்றும் சயூர ஆகிய கப்பல்கள் கொழும் பிலிருந்தும் மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பலப்பிட்டிய பிரதேசத்தில் 5 மீனவர்களும், கொழும்பில் 2 மீனவர்களும் கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் காணப்படும் கொந்தளிப்புநிலை சற்றுக் குறைவடைந்ததும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையினருக்குச் சொந்தமான பல சிறிய படகுகள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங் களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடல்கொத்தளிப்பு தொடர்ந்தும் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம், மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக விமானப் படையினரின் ‘பெல் 412’ ஹெலிக்கொப்டரும், ‘வை1’ விமானமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
5ற்கும் மேற்பட்ட மீனவர்கள் விமானப் படையினரின் பெல் 412 ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இது இவ்விதமிருக்க கடும் காற்றுக் காரணமாக வீதிகளின் குறுக்கே முறிந்து வீழ்ந்திருக்கும் மரங்களை வெட்டி அகற்றி, வீதிகள் ஊடான போக்குவரத்துக் களைச் சீர்படுத்துவதற்கும், காற்றின் காரணமாக வீட்டுக் கூரைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குமாக பெரும் எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்தார்.
பலப்பிட்டி பிரதேசத்தில் 5 படகுகள் முற்றாக நீரில் மூழ்கியதுடன், 15 முதல் 20 வரையான படகுகள் காணாமல் போயுள்ளன. நீரில் மூழ்கிய மூன்று மீனவர்களின் சடலங்கள் பேருவளைப் பகுதியில் கரையொதுங்கியதுடன், 5 மீனவர்கள் பலப்பிட்டியவில் கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளனர். 12 மீனவர் கள் காயமடைந்த நிலையில் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தெஹிவளை பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவப் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி தெஹிவளைப் பிரதேச மீனவர்கள் நேற்றுக் காலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தின் குறுக்கே மீன்பிடிப் படகை நிறுத்தி ரயிலை மறித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அதிகாரிகளும், பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து கடற்படையினர் அப்பகுதி மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தெய்வேந்திரமுனை பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற 8 படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. மோசமான காலநிலை யால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன்பிடிப் படகுக
ளில் பொருத்தப்பட்டி ருக்கும் ஜீ.எஸ்.பி கருவிகளின் அலைகளை அறிந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
காலநிலை சீரடையும்வரை தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென எச்சரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்றுமுன்தினம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் மீனவர்கள் அதனைப் பொருட்படுத்தாது கடலுக்குச் சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடுமையான காற்றுக் காரணமாக தென்பகுதி கரையோர ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கரையோரத்தில் சேவையில் ஈடுபட்ட அனைத்து ரயில் சேவைகளும் காலதாமதமானதுடன், தண்டவாளங்களில் மரங்கள் முறிந்திருந்ததால் போக்குவரத்தில் இடஞ்சல் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது. எனினும், உடனடியாக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன், போக்குவரத்து சீரடைந்ததாகவும் தெரிவித்தனர்.
கடுமையான காற்றினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்து வீதிகளூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் மின்சார விநியோகங்களும் தடைப்பட்டன. தடைப்பட்ட மின்விநியோகத்தை வழங்குவதற்கு மின்சாரசபை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தது.
– தினகரன்
![n-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/n-11.jpg?w=300&h=200)
Leave a comment