உண்மையிலேயே உஸ்மானிய ஆட்சியானது ஐரோப்பியருக்கு மிகவும் சவாலானதாகக் காணப்பட்டது. எனவே, இவ்வாட்சியை முறியடிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் பல திட்டங்களை விடுத்தனர். இவற்றுள் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட பெகோ ஒப்பந்தம், பெல்போர் ஒப்பந்தம் என்பவை முக்கியமானவைகள்.
இவை தவிர, உஸ்மானிய ஆட்சியின் கீழிருந்த நாடுகளுக்குச் சென்று பிரதேசவாதம், இனவாதம் என்பவற்றைத் தூண்டினார்கள். அதேநேரம் உஸ்மானிய ஆட்சி யாளர்களது தவறுகளையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
ஒருமுறை உமர் (ரழி) அவர்களது தலைமையில் ஈராக், எகிப்து நாடுகள் வெற்றிகொள்ளப்பட்ட போது இந்த நாடுகளை சிப்பாய்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுப்பது சிறந்தது என ஸஹாபாக்கள் ஆலோசனை கூறிய போது கலீபா அவர்கள் இதற்கு இணங்காமல் தமது கிலாபத்தின் ஆதிக்கத்தின் கீழே வைத்துக் கொண்டார்கள்.
இதனால் இப் பிரதேச மக்கள் பிரதேச இன வாதங்களை மறந்து சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்தார்கள் என்பது வரலாற்றுண்மை. ஆனால் துருக்கி ஆட்சியாளர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபடாது. சிப்பாய்களுக்கு மத்தியில் அவற்றைப் பிரித்துக் கொடுத்ததால் அம்மக்களிடையே பல பிளவுகளும், முரண்பாடுகளும் தோன்றின.
இது தவிர, துருக்கியில் ஜனநாயக அரசு வேண்டும் என நியாஸிபெக், அன்வர் பாஷா தலைமையில் இளம் துருக்கியர் அமைப்பு தோற்றம் பெற்ற கிளர்ச்சியில் ஈடுபட்டு துருக்கி ஆட்சியமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டமையானது கிலாபத் வீழ்ச்சிக்குக் காரணமாகும். மேலும் ஆட்சியாளர்களின் சுயநலம், மார்க்கப்பற்றின்மை, விவேகமின்மை, துணிச்சலின்மை என்பனவும் கிலாபத் வீழ்ந்ததற்கான இதர காரணங்களாகும்.
ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் ஆப்துஹீ போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் கிலாபத்தை வீழாமல் தடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இதன் காரணமாக துருக்கியின் பிடியிலிருந்து ஒவ்வொரு நாடாக விடுபடத் தொடங்கி கிலாபத் அழிவின் விளிம்பு நிலையில் நின்றது. இவ்வாறான சூழ்நிலையில்தான் இராணுவத்தின் ஓர் அதிகாரியாக இருந்த முஸ்தபா கமால் துருக்கிய ஆட்சியைக் கைப்பற்றி 1924 இல் உத்தியோகபூர்வமாக கிலாபத் ஆட்சியை ஒழித்து மதச்சார்பற்ற அரசு உருவாக வழிசமைத்தார்.
துருக்கி குடியரசானதன் பின்னரான ஆட்சியாளர்கள்
முஸ்தபா கமால் அத்தாதுர்க்கின் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய கட்சி இஸ்மத் அனூனு என்பவரை குடியரசுத் தலைவராக நியமித்தது. 1950 வரை இவரது ஆட்சி தொடர்ந்திருந்தது. இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் (1946) ஜனநாயகக் கட்சி எனும் பெயரில் ஒரு புதிய எதிர்க் கட்சி உருவாகியது. இதன் தலைவரான ஜலால் பாயர் 1950 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியானார். பிரதமராக அத்னான் மந்திரீஸ் தெரிவானார். இந்தக் காலப் பகுதியில்தான் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்கள் துருக்கியில் தோன்றின.
(தொடரும்)
– தினகரன்

Leave a comment