யாழ்ப்பாணம்: இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பலாலி விமான தளத்தில் வைத்து வரவேற்றார்.
இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே இன்றைய தினம் யாழ். குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டனர். மேற்படி குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலாலியில் வைத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதன்போது இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் உடனிருந்தார். அதன் பின்னர் இத் தூதுக்குழுவினர் வடகடல் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் குருநகர் மீன்வலை உற்பத்தி தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.
இக்குழுவினர் மேற்படி தொழிற்சாலையின் தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறியும் பொருட்டு இன்றையதினம் (5) விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது இந்திய அரசினால் வழங்கப்பட்ட மீன்வலை உற்பத்தி தொழிற்துறை சார்ந்த இயந்திரங்களை பார்வையிட்ட இக்குழுவினர் தொழில் நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதன் மேம்பாடு மற்றும் முன்னேற்றம் தொடர்பாகவும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
மேற்படி தொழிற்சாலையின் தொழிற்துறை மேம்பாட்டிற்கென இந்திய அரசு நான்கு இயந்திர சாதனங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே தொழிற்சாலையினது தொழில்நடவடிக்கைகளை பார்வையிட்ட இக்குழுவினர் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள இக்குழுவினர் குடாநாட்டில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்து நேரில் ஆராய்ந்தறியவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment