7வதும் இறுதியுமான ஐ.சி.சி. சம்பியன் கிண்ணப்போட்டி நாளை ஆரம்பம்: நுழைவுச் சீட்டுக்கள் தீர்ந்ததால் இரசிகர்கள் அவதி!

ICC-champions-trophy-2013[1]– MJ

லண்டன்: 1998ம் ஆண்டிலிருந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால், நடாத்தப்பட்டு வரும் ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடர் நாளை லண்டன் மற்றும் கார்டிப் நகரங்களில் ஆரம்பமாகிறது.

7வதும் இறுதியுமான இத்தொடர் கிரிக்கட் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றது. தற்பொழுது இங்கிலாந்தில் வெயில் காலம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் கிரிக்கட் விளையாடக்கூடிய, இரசிக்கக்கூடிய இதமான காலநிலை அங்கு தற்பொழுது நிலவி வருகின்றது. இரவு 10 மணிவரைக்கும் சூரிய வெளிச்சம் வெயில் காலங்களில் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இடம்பெற்ற 6 பயிற்சிப் போட்டிகளில், இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது பயிற்சிப்போட்டி மாத்திரமே மோசமான காலநிலையால் கைவிடப்பட்டிருந்தது. ஏனைய 5 போட்டிகளும் இடம்பெற்று, முடிவுகளும் பெறப்பட்டிருந்தன. விளையாடப்பட்ட பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவி இருந்தது.

நாளை வேல்ஸ்-கார்டிப் நகரில் ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் இந்தியா-தென் ஆபிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஆரம்ப போட்டியில் ஐ.சி.சி பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச மற்றும் உள்ளுர் விளையாட்டு வீரர்கள் மற்றும் சிசேட அதிதிகள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், வலையமைப்புக்கள் மூலமாக பெற்றுக் கொள்ளும் நுழைவுச் சீட்டுக்கள் அனைத்தும் தற்பொழுது விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நுழைவுச் சீட்டுக்களும், இவை இரு நாடுகளின் தனித்தனியாக ஏனைய நாடுகளுடன் விளையாடும் போட்டியின் நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளன. இதே போல், இங்கிலாந்து விளையாடும் போட்டிகளின் நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளன.

இறுதி நேரத்தில் வலையமைப்புக்கள் மூலமாக பெற்றுக்கொள்ளும் இரசிகர்கள் நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர். எனினும் சில வலையமைப்புக்கள் இரட்டிப்பு விலைக்கு குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டுக்களை விற்றுவருவதாக தெரியவருகிறது.

எதிர்பாராத விதமாக அடிக்கடி காலநிலை மாற்றம் இங்கிலாந்தில் ஏற்படுவது வழக்கம். வெயில் காலமென்றாலும், இலேசான குளிர், மழை, காற்று என்பனவற்றால் சில போட்டிகளின் முடிவுகள் மாற்றமடையலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், அடுத்த வாரம் வரை தொடர்ந்து வெயில் காலநிலை நிலவும் என்பதாக வானிலை குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இலஞ்சம், சூதாட்டம் விடயத்தில் வீரர்கள் ஈடுபடுவது விடயங்களில் இரகசிய கண்காணிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. தங்குமிடம், பயிற்சி நிலையங்கள், மைதானம் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் சகலதும் துப்புத் துளவி நோக்கப்பட்டு வருகின்றது. பத்திரிகைகளும் இவ்வீரர்களுக்குப் பின்னால் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இச்சுற்றுப் போட்டியில் அதிகூடிய ஒட்டங்களை கிறிஸ் கைல் (695), அதிகூடிய விக்கட்டுக்களை முத்தையா முரளீதரன் (24) ஆகியோர் பெற்றிருப்பதுடன், இரு முறை கிண்ணத்தை வென்ற நாடாகவும்,  நடப்புச் சம்பியனாகவும் அவுஸ்திரேலியா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment