பர்மாவில் மீண்டும் கொக்க கோலா

cocaயங்கோன்: பர்மாவில் அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக கொக்க கோலா தனக்கென்று ஒரு உற்பத்தி மையத்தை தொடங்கியுள்ளது. அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு அங்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களில் கொக்க கோலாவும் ஒன்று.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பர்மா அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஆரம்பித்த நிலையில், அதன் மீதான தடைகள் நீக்கப்பட்டன.

யங்கோன் (ரங்கூன்) நகரின் புறநகரில் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமது நிறுவனம் மீண்டும் பர்மாவுக்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அதன் தலைவர் முஹ்தார் கெண்ட் தெரிவித்துள்ளார்.

இதை ஒரு சரித்திரபூர்வமான தருணம் என்று வர்ணித்துள்ள அவர், பர்மா போன்ற ஒரு அழகிய நாட்டில் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமது நிறுவனம் கால்பதித்துள்ளது குறித்தும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருநூறு மில்லியன்  டொலர்களை தாங்கள் அங்கு முதலீடு செய்யவுள்ளதாக கொக்க கோலா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 20,000 க்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறும் அந்த நிறுவனம், பல உள்ளூர் வர்த்தகர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி மையம் அமைந்துள்ள பிந்யாப் பகுதியிலிருந்து உள்ளூர் வர்த்தகர்களுடன் இணைந்து செயல்படும் நடவடிக்கை தொடங்கும் எனவும் கொக்க கோலாவின் தலைவர் கூறுகிறார்.

-bbc/tamil

Published by

Leave a comment