காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு இன்று செய்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.
அங்கு விஜயம் செய்த அவர் இன்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சிறிலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த 4000 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்விலும் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 4 பாலர் பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வசதி குறைந்த குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்களையும்,பாலர் பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சவுதி அரேபிய நாட்டில் இருந்து வருகைதந்த டாக்டர் அய்மன்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்,அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி), சிறிலங்கா ஹிறா பௌண்டேஷன் தலைவர் குறைஷ் உட்பட ஹிறா பௌண்டேஷன் நிறுவன பிரதிநிதிகள் உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இளம் சிறார்களின் அபிநய பாடல்கள் இடம்பெற்று அவர்களுக்கு பிரதம அதிதியினால் விஷேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மற்றும் சவுதி அரேபிய நாட்டில் இருந்து வருகைதந்த டாக்டர் அய்மன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a comment