– அஹ்ராஸ்
கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குள் காணப்படும் வீதிகள், சிறுவீதிகள், நகரசபைக்குள் உள்வாங்கப்படாத வீதிகளை உள்வாங்கி புதிய வீதிகளுக்கு பெயர்களும் வைக்கப்பட்டு சட்டபூர்வமாக பதிவு செய்து வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கையினை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி மேற்கொண்டு வருகின்றார். இது சம்பந்தமான கூட்டம் நகரபிதா தலைமையில் இன்று (03.06.2013) 9.00 மணியளவில் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதுவரை காலமும் நகரசபை எல்லைக்குள் காணப்படும் வீதிகள் அனைத்தும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டு வர்த்தமானி மூலமாக வெளியிடப்படாத நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக நகரபிதா ஹில்மி முன்னெடுத்துவரும் முயற்சியின் மூலம் கிண்ணியா நகரசபை எல்லைக்குள் காணப்படும் 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள வீதிகள் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ள நிலையில் மூன்று கட்டங்களாக கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று இறுதி தீர்மானம் எடுப்பதற்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதோடு புதிய வீதிகளுக்கான பெயர்களும், வீதிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது நகரபிதா எம்.எம்.ஹில்மி, நகரசபை உறுப்பினர்கள், கிண்ணியா ஹாதி நீதிமன்ற நீதிவான் பாரூக், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், சனசமூக நிலையங்களின் தலைவர்கள், பள்ளிவாயல், கோயில்களின் தலைவர்கள் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Leave a comment