
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ. யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் தங்க நகைகள், ஆலய விக்கிரகங்கள், ஆலய பொருட்கள் என்பன களவாடப்படும் நிலமை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அந்தவகையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயம், புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலயம், மிறாவோடை பத்திரகாளி அம்மன் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் களவுகள் நடைபெற்றது.
ஆனால் சனிக்கிழமை நள்ளிரவு குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் திருடர் குழுவினரினால் ஆலய மூல விக்கிரங்கள், இதர கருங்கல் விக்கிரங்கள், அதாவது மூல விக்கிரகமாக முருகன், வள்ளியம்மை, தெய்வானை மற்றும் இதர விக்கிரங்களான வைரவர், சண்டேஷ்வரர், மயில்வாகன பீடம், பலிபீடம், கொடித் தம்ப பிள்ளையார், ஒன்பது நவகிரகம், மாரியம்மன் உட்பட்ட பல விக்கிரகங்கள் கிளப்பப்பட்டு அதன் அடியில் பதிக்கப்பட்ட தங்க இயந்திர தகடுகள் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை கேள்வியுற்றதும் அவ்விடத்திற்கு சென்று நிலைமையை கண்ணுற்று மிகுந்த கவலையடைந்துள்ளேன்.
கடந்த 30 வருட கால யுத்த சூழலில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதாக அரசாங்கம் அறிவிக்கப்பட்ட பின்னரே இவ்வாறான கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அண்மைக் காலமாக ஆலயங்களில் களவு சார்பாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.
ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஆலய தர்மஹர்த்தா சபையினரால் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி ஆலயங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை விசாரிப்பது பொலிஸாரின் அசமந்ததனமாக செயற்பாடாகவும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில காலம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் சார்பாக பொலிஸார் இதுவரை களவாடப்பட்ட பொருட்களோ, திருடர்களையோ இதுவரை கைது செய்யப்படவில்லை.
உண்மையில் குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தங்க இயந்திர தகடுகள் திருடப்பட்டமை, மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்வபங்கள் அனைத்தும் கவலையை தருகின்றது. எனவே இங்கு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் போன்று தங்களுடைய ஆலயங்களில் இடம்பெறவிருந்ததாக ஆலய தர்மஹர்த்தா சபையினர் தனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆலயங்களின் தங்க நகைகள் பாதுகாக்க வேண்டிய சூழலில் தாங்கள் தற்போது உள்ளோம். இவ்விடயமாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கதைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன்.
இச்சம்பவத்தை நான் மீண்டும் மீண்டும் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment