‘விடுதலைப்புலிகளின் நிதிக்கட்டமைப்பு தொடர்கிறது’ – அமெரிக்கா

ltte (2)லண்டன்: விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி திரட்டும் கட்டமைப்பு 2012 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கிறது என்று அமெரிக்க அரசுத்துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளில் பயங்கரவாதம் குறித்த அறிக்கை கூறியுள்ளது.

அதேவேளை, இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்தவில்லையாயினும், அகதி முகாம்களில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கொண்டு செல்வதில் அந்த அமைப்பு தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு நிதிக் கட்டமைப்பு தொடர்ந்தும் நிலைபெற்று இருப்பதாகக் கூறும் செய்தியாளர் நிராஜ் டேவிட், அதனை உடைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினாலும், ஏனைய சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெறவில்லை என்றும் கூறுகிறார்.

சர்வதேச ரீதியிலான ஆட்கடத்தல் விவகாரத்தைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கட்டமைப்பு ரீதியாக அதில் தொடர்பு இருப்பதாக தன்னிடம் தகவல் கிடையாது என்று கூறும் நிராஜ், அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் தனிப்பட்ட வகையில் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் கூறுகிறார்.

-bbc/tamil

Published by

Leave a comment