சிங்க வனம் ஒன்று
சிறிது சிறிதாய்
அழிந்து கொண்டிருந்தது
பல வருடங்களாய்…
சிறிய மிருகங்கள்
பலங் கொண்ட மிருகங்களை
பந்தாடிக் கொண்டிருந்தன
அப்போது…
சிங்க ராஜாவின்
சிம்மாசனம்
கேள்விக் குறியானது.
காட்டை
துப்பரவு செய்யாமல்
ஆழ முடியாது என்று
அடுத்த காட்டிலிருந்து
அறிவுரை வந்தது.
சினத்தோடு புறப்பட்டார்
சிங்க ராஜா..!
முளை, கிளை, கந்து கொப்பு
அடிமரம் ஆணி வேர் என
அத்தனையும் வெட்டித் தள்ளி
அழகு படுத்தினார்
சிங்க வனத்தை…!
சிங்க வனம் செழிப்பானது
ஆனால்
சிங்க வனத்துச் சிறைக்குள்
சின்ன மானினம் ஒன்று
சிக்கிக் கொண்டது வசமாக..
மானினத்தின்
இயலாமையைப் புரிந்து கொண்ட
குள்ள நரிக் கூட்டமொன்று
குறி வைத்தது மானினத்தை..
அதன்
முகத்திரையை கிழித் தெறிய
கிளர்ந் தெழுந்தது
அந்த கிழட்டு நரிக் கூட்டம்.
அதன்
சாப்பாட்டுத் தட்டுக்குள்
அத்து மீறி
வாந்தியெடுக்க ஆசைப்பட்டது.
அந்த இனம்
சேர்த்து வைத்த
சொத்தையெல்லாம்
சேதப்படுத்தத் தொடங்கியது.
அதன்
வழிபாட்டுத் தலங்களையும்
வாழும் இடங்களையும்
குறிவைத்துத் தாக்கியது.
மானினத்தின் எல்லைக்குள்
தங்களின்
அடையாளத்தை உறுதிப்படுத்த
அத்துமீறி
அத்திவாரக் கற்களையும் வைத்தது.
கிழட்டு நரியொன்iறை
தீக்குப் பலியாக்கி
தெருவோர
நாடகமொன்றையும்
நரிக் கூட்டம்
நடாத்திக் காட்டியது.
முற்றாக
மானினத்தை அழித்து விட
அல்லது விரட்டிவிட
முடிவெடுத்தது
தந்திரமாக
மந்திர ஆலோசனையும் நடத்தியது.
சிங்க ராசாவின்
மந்திரி சபையில்
அதற்கான
அனுமதியும், ஆசியும் கிடைத்தது.
இத்தனையும்
பார்த்துக் கொண்டு
கொடுப்புக்குள் சிரித்தவாறு
அரியாசனையில்
அமர்ந்து கொண்டது
அந்த சிங்க ராஜா..!
01.06.2013

Leave a comment