காத்தான்குடி: காத்தான்குடியின் மத்திய பகுதியில் சுமார் 30 வருட வரலாற்றைக் கொண்டமைந்த, பொது மைதானமாகவும், பரீட் அரங்காகவும் திகழ்ந்த இம்மைதானம், 1998ம் ஆண்டுகளின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானமாக அழைக்கப்பட்டு வருகின்றது.
காத்தான்குடியின் மத்திய பகுதியில், சுஹதா பள்ளிவாயல், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், காத்தான்குடி மத்தி கல்வி அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நீர் வழங்கள் அலுவலகம், சமூர்த்தி அலுவலகம், மதரஸாக்கள் மற்றும் குடியிருப்புக்களைக் கொண்டமைந்த ஓர் அழகிய சூழலின் மத்தியில் இம்மைதானம் அமைந்திருக்கின்றது.
சுமார் இரண்டு வரடங்களுக்கும் மேலாக, இம்மைதானம் அபிவிருத்திசெய்யப்படும் நோக்கில் ஆமை வேகத்தில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சில காலகட்டங்களில் இதன் அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தப்படுவதும், பின்னர் தொடர்வதுமாக வருடங்கள் இரண்டைக்கடந்தும் முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக சுமார் இரு வருடங்களுக்கும் மேலாக விளையாட்டுக்கள் அல்லது சுற்றுப்போட்டிகள் விளையாடப்படாத நிலையில் சுடுகாடாக சென்று கொண்டிருக்கின்றது.
சனி, ஞாயிறு தினங்களில் காலை தொடக்கம் மாலைவரை இளைஞர்கள் பலர் அரங்கின் மேல் உட்கார்ந்து கொண்டு, அவ்வீதியால் தனியார் வகுப்புக்களுக்குச் சென்று வரும் மாணவிகளை பகிடி செய்வதும், ஆபாச வார்த்தைகளைக் கொண்டு பேசுவதும், கூக்குரலிடுவதும், விசில் அடிப்பதும், தொலைபேசி இலக்கங்களை கோருவதும், மாணவிகளை பின்தொடர்வதுமாக பல அட்டாகசங்கள் இத்தகைய இளைஞர்களால் இம்மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு இரவிலும் ஒன்று கூடும் இன்னும் பல இளைஞர்கள், தங்களது காதலை தொலை பேசியில் பகிர்ந்து கொள்வதற்கு ஓர் இடமாக இம்மைதானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் துர்வாடைப் புகை(த்தல்) இப்பகுதியில் வீசுவதாக அப்பகுதியால் பள்ளிவாயலுக்குச் சென்று வருவோர் முகம் சுழிக்கின்றனர்.
மேலும் ‘இரவு நேரங்களில் மதுபான போத்தல்கள் உடைக்கும் சத்தங்கள் தங்களுக்குக் கேட்கின்றன, சத்தமிடுதல், மற்றும் இன்னும் மேலதிகமான சமூக விரோதச் செயல்கள் இம்மைதானத்துக்குள் இடம்பெற்று வருகின்றன” என்பதாக இப்பகுதியைச் சூழவுள்ள தாய்மார்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
‘இது இன்று நேற்று அல்ல! சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இம்மைதானத்தில் இவ்வாறான சமூக விரோதச் செயல்கள் இடம்பெற்றுவருகின்றன’ என்பதாக முதியவர் ஒருவர் கவலை தெரிவித்தார்.
ஓர் அழகிய சூழலில் நிமிர்ந்து மிளிர வேண்டிய இம்மைதானம் பலவருடங்களாக சுடுகாடுபோல் காணப்பட்டு வருகின்றது. எனவே இவ்விடயத்தில் சமூக நலன் விரும்பிகள் அக்கறையுடன் செயற்படுமாறு கேட்கப்படுகின்றனர்.



Leave a comment