ஐ.சி.சி சம்பியன்ஸ்: முதலாவது பயிற்சிப்போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதல்!

ICC%20Champions%20Trophy[1]-MJ

லண்டன்: 2013ம் வருடத்துக்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதித் தொடரை, இங்கிலாந்து-வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து  நடாத்துகின்றன. ஐ.சி.சி தரப்பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள் இச்சுற்றுப்போட்டியில் பங்கெடுக்கும்.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் போன்று 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் சர்வதேச போட்டிகளாக இரு வருடங்களுக்கு ஒரு முறை இத்தொடர் இடம்பெற்று வந்தது.

1998, 2000 ஆகிய வருடங்களில் இடம்பெற்ற இரு தொடர்களும் ‘ஐ.சி.சி. நொக்கவ்ட் சுற்றுப்போட்டி’ என அழைக்கப்பட்டிருந்தது. எனினும் 2002 இல் இருந்து ‘ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம்’ என அழைக்கப்பட்டு வருகிறது.

1998 தொடக்கம் 2006 வரை முறைப்படி இரு வருடங்களுக்கு ஒரு முறை இத்தொடர் இடம்பெற்று வந்தது. அதன் பின்னர் 2008ம் ஆண்டு இடம்பெற இருந்த இத்தொடர், பிற்போடப்பட்டு 2009ல் இடம்பெற்றிருந்தது.

இருபது20 போட்டிகளும் அதற்கான உலகக்கிண்ண சுற்றுப்போட்டிகளும் ஐ.சி.சியினால் தற்பொழுது நடாத்தப்பட்டு வருவதால், இந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் தேவையற்றதொன்றாக கருதப்பட்டது. இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி, 2011ல் இத்தொடர் இடம்பெறவில்லை. 2011ல் உலகக் கிண்ணம் இடம்பெற்றதால், ஐ.சி.சி சம்பியன்ஸ் மீண்டும் பிற்போடப்பட்டது.

iccதற்பொழுது 7வதும் இறுதியுமான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் எதிர்வரும் ஜூன் 6ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது.

இத்தொடரில் பங்குபற்றும் நாடுகளின் வீரர்கள் தற்பொழுது இங்கிலாந்தை வந்தடைந்திருக்கின்றனர். அங்கு கால நிலை தொடர்ந்தும் ஏமாற்றமடைந்து வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. தொடர்ச்சியான மழையும், சுழல் காற்றும், குளிரும் அடிக்கடி இடம்பெறுவதால், இத்தொடர் எந்தளவு இரசிகர்களுக்கு விருந்தளிக்கப்போகின்றது என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.

இந்நிலையில் ‘வோர்ம் அப்’ எனும் பயிற்சிப்போட்டிகள் நாளை 30ம் திகதியிலிருந்து நடைபெற இருக்கின்றது. மொத்தம் 6 பயிற்சிப் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.

நாளை 30ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறும் முதலாவது பயிற்சிப்போட்டியில், இலங்கையும் பாகிஸ்தானும் மோதுகின்றன. பேர்மிங்கம், எங்பக்ஸ்டன் மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிறது.

பயிற்சிப்போட்டிகளாக இருப்பினும், பார்வையாளருக்கு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. ஜூன், முதலாம் திகதி சனிக்கிழமை இலங்கை-இந்திய அணிகளுக்கான போட்டியும், இதே தினத்தில் அவுஸ்திரேலியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியும், ஜூன் 3ம் திகதி, திங்கட்கிழமை பாகிஸ்தான்-தென்னாபிரிக்கா, ஜூன் 4, செவ்வாய்க்கிழமை இந்தியா-அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை-மேற்கு இந்தியத் தவுகள் அணிகளுக்குமிடையிலான போட்டிகளும் இடம்பெற இருக்கின்றன.

இச்சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டி இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் கார்டிப் நகரில் எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகிறது. 

இச்சுற்றுப் போட்டியில் அதிகூடிய ஒட்டங்களை கிறிஸ் கைல் (695), அதிகூடிய விக்கட்டுக்களை முத்தையா முரளீதரன் (24) ஆகியோர் பெற்றிருப்பதுடன், இரு முறை கிண்ணத்தை வென்ற நாடாகவும், நடப்புச் சம்பியனாகவும் அவுஸ்திரேலியா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Published by

Leave a comment