அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவிப்பு!
கொழும்பு: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து ஈரானிலிருந்து மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்யவில்லை என பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2011ஆம் ஆண்டு ஜுன் மாதத்திலேயே அமெரிக்கா ஈரானுக்கெதிராக பொருளாதார தடை விதித்தது.
இதன் பின்னர் ஒரு வருடத்தில் இலங்கையின் எரிபொருள் தேவையில் 20% வீதத்தையும் மேலும் 6 மாதங்கில் 10%வீதத்தையும் ஈரானிலிருந்து எண்ணெயை கொள்வனவு செய்ய முடிந்தது. அதன் பின்னர் ஈரானிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்படவே இல்லை.
கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றிலிருந்து இலங்கை ஈரானின் எரிபொருளை கொள்வனவு செய்வதாக ஐக்கிய தேசிய க.ட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்துள்ள கருத்தை முற்றாக மறுத்த அமைச்சர், இது அபண்டமான தேசத் துரோக குற்றமாகும் என கூறினார்.
எரிபொருள் கொள்வனவில் நிதி கையாள்வது முறையாக மேற்கொள்ளப்படுவதாக கூறிய அமைச்சர் ,பத்து லட்சம் மசகு எண்ணெய் பீப்பாய்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கும் என்றும் தெரிவித்தார்.
தற்சமயம் தேவைக்கேற்ப எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அதிக விலை கொடுத்து எரிபொருள் கொள்வனவு செய்யும் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
-GA
Leave a comment