கொழும்பு: இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தார் கே. முல்லா, நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21) மாலை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் டுபாய் என்பவற்றின் முதலீட்டாளர்கள், யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை பல்வேறு துறைகளிலும் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருவதால் இங்கு வர்த்தகம், நிர்மாணம் போன்ற துறைகளில் கூடுதலான முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவதாக தூதுவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
புனித ரமழான் மாதத்தை மையப்படுத்தி அரபு, இஸ்லாமிய நாடுகளில் வர்த்தகக் கண்காட்சியொன்றை இலங்கையில் நடத்துவது மக்களைப் பெரிதும் கவருவதோடு அந் நாடுகளின் கலாசாரம், சமயம், தொழிற்துறைகள் என்பனபற்றி இங்குள்ள மக்கள் நன்கு அறிந்து கொள்வதற்கு உதவுமென அமைச்சர் ஹக்கீம் கூறினார். இதுபற்றித் தாம் ஏற்கனவே தம்மைச் சந்தித்த அரபு நாடுகளின் தூதுவர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும், இலங்கைக்கும் இடையே சிறைக் கைதிகளை பரிமாறும் திட்டம் குறித்தும் அமைச்சர் தூதுவரிடம் விளக்கிக் கூறினார். இரு நாடுகளையும் சேர்ந்த பிரஜைகள் ஏதாவது குற்றச் செயலுக்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களின் ஊடாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின் முதல் ஆறு மாத காலத்தை தாம் தொழில் புரியும் அல்லது தங்கியிருக்கும் நாட்டின் சிறைச்சாலையில் கழித்த பின்னர் எஞ்சிய காலத்தை தமது சொந்த நாட்டுக்குத் திரும்பி அங்கு சிறைவாசம் அனுபவிப்பதற்கு வகை செய்யும் வகையில் இந்தச் சிறைக் கைதிகள் பறிமாற்றுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறாக சிறைக்கைதிகளை பறிமாறிக்கொள்ளும் உடன்படிக்கை ஏற்கனவே இலங்கைக்கும் ஏனைய சில நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் இருப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர், தமது நாட்டில் இலங்கையர்கள் அதிகமானோர் தொழில் புரிவதாகவும், அங்குள்ள ஏனைய நாட்டவர்களோடு ஒப்பிடும் பொழுது அவர்கள் மிகக் குறைவாகவே குற்றச் செயல்களை புரிவதாகவும், அவ்வாறு அவர்கள் புரியும் குற்றங்கள் பெரும்பாலும் பாரதூரமற்றவை என்றும், பொதுவாக அங்கு கடமையாற்றும் இலங்கையர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் சிலாகித்துக் கூறினார்.
இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக ஐக்கிய அரபு இராச்சியமும் தொழில், வர்த்தக பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வை காண்பதற்கு முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம் அத்துறையில் கைதேர்ந்த இலங்கை சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்பை பிரஸ்தாப நடுத்தீர்ப்பு மையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சொன்னார். அதற்கான சாத்தியப்பாட்டைப்பற்றி தமது நாடு நிச்சயம் சீர்தூக்கிப் பார்க்குமென தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தார் கே.முல்லா கூறினார்.



Leave a comment