-பழுளுல்லாஹ் பர்ஹான்
கொழும்பு: கிழக்கு மாகாண விவசாய கால்நடை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு துருக்கி அரசாங்கம் சகல உதவிகளையும் மேற்கொள்வதற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் துருக்கி நாட்டிற்கு விரைவில் விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இலங்கையிலுள்ள துருக்கி நாட்டின் தூதுவர் இஸ்கந்தர் கே.ஒகேயாய் (Iskender K.Okyay) கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி ,மீன்பிடி, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களை கேட்டுக் கொண்டார்.
கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமட்டிற்கும் துருக்கி தூதுவருக்குமிடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஒன்று நேற்று முன்தினம் 20.05.2013 கொழும்பு ஹில்டன் ஜெய்க் வசிப்பிடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு துருக்கித் தூதுவர் அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின் போது இலங்கைக்கான துருக்கித் தூதுவருக்கு மாகாண அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் துருக்கியின் பங்களிப்புத் தொடர்பான அவசியம் பற்றி எடுத்துக் கூறியதுடன் கிழக்கு மாகாணத்தின் கால்நடை, விவசாய , சுற்றுலாத் துறை அபிவிருத்தியில் துருக்கியின் பங்களிப்பினை வலியுறுத்தி மேற்படித் துறைகளில் துருக்கியின் முதலீடுகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்;.
இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு துறைகளில் முதலீடு தொடர்பான திட்ட அறிக்கைகளையும் துருக்கி தூதுவரிடம் கையளித்தார். மேலும் துருக்கி, இலங்கை நட்புறவுக் கழகத்தினை ஸ்தாபிப்பதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் துருக்கி தனது முழு ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கும் என உறுதியளித்த துருக்கித் தூதுவர் மிக விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் போது அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஞானசேகரம், அமைச்சரின் ஆலோசகர் சமந்த பி அபேவிக்கிரம, ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Leave a comment