மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலக மங்களாகம, பெரிய புல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய கிராமங்களில் இது தொடர்பான வைபவங்கள் நடைபெற்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 வீடுகள் இந்திய உதவியுடன் அமைக்கப்படவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் நஜீப் ஏ. மஜித் உட்பட அமைச்சர் பசீர் சேகுதாவூத் பிரதி அமைச்சர்களான எம். எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் வினாயகமூர்த்தி முரளிதரன் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ,கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம , கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம. சுபைர் ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் உட்பட பலரும் இந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 50ஆயிரம் வீடுகளில் 4ஆயிரம் வீடுகள் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதன் ஆரம்பகட்டமாக இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் மீள்குடியேற்ற கிராமங்களான மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் இருக்கின்ற மங்களகம கிராமம்,மட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய புல்லுமலை கிராமம், றூகம் கிராமம் உள்ளிட்ட மூன்று கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.



Leave a comment