ஏறாவூர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இந்த அரசிலிருந்து வெளியேறாது. முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்ற யார் சதி செய்கிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடத்தை முஸ்லிம் காங்கிரஸ் புகட்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை வைத்துள்ளது.
இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கைத்தொழில், அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் அல்நஹ்ல் இளைஞர் கழகம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய இளைஞர் கலை, கலாசார விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஏறாவூர் அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், விசேட அதிதிகளாக ஏறாவூர் நகரபிதா அலிசாஹிர் மெளலானா, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். மொஹமட் ஹனீபா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.என்.எம். நைறூஸ் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை அதிகாரி ஜே. கலாராணி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அபுல் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் கூறியதாவது:
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது நேர காலத்தோடு முடிவுகளை எடுக்கும் ஒரு அரசியல் கட்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், அப்படியான அரசியல் திருத்தங்கள் வந்து மாகாண சபையினுடைய அரசியல் அதிகாரத்தைக் குறைக்கின்ற அல்லது முஸ்லிம்களுடைய அரசியல் அதிகாரத்துக்கு ஒரு களங்கம் விளைவிக்கின்ற எந்த ஒரு அரசியல் தீர்வு வருமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக அந்த அரசியல் தீர்வுக்கு ஆதரவு அளிக்காது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவுகளை கடைசி நிமிடம் வரைக்கும் நன்கு பரிசீலித்துப் பார்த்து விட்டு சரியான முடிவுகளையும், தீர்ப்புக்களையும் சரியான நேரத்தில் வெளியிடும் என தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பற்றி இன்று நாடளாவிய ரீதியிலே பல வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அரசாங்கத்திலிருந்து பிரிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக் கின்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். எங்களுடைய கட்சிக்குள்ளும், வெளியிலே யும், சில ஊடகங்களும், எங்களை எவ்வாறு வெளியே அனுப்பி இந்த சமூகத்தின் நிலைப்பாட்டை புதினம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு நாங்கள் சொல்லுகின்ற விடயம், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இந்த அரசாங்கத்தை விட்டு வெறுமனே எந்த வித நியாயமுமின்றி வெளியேறுவதற்கு தயாராக இல்லையென்ற உத்தரவாதத்தை எங்களுக்கு தலைவர் தெளிவாக எடுத்துள்ளார் என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறான மோசமான அரசியல் தகவல்களை வெளியிடுகின்றவர்க ளுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லி வருகின்றோம்.
எங்களுடைய முடிவுகளை எடுக்கின்றவர் களாக நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில ஊடக ங்கள் இந்த முஸ்லிம் காங்கிரஸை அர சாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பாட்டு க்கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை நாங்களும், தலைவர் ரவூப் ஹக்கீமும் மிகவும் தெளிவாக தெரிந்து கொண்டுள்ள அதேவேளையில் ஜனாதிபதி மீது நாங்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கின்றோம்.
ஆகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆனது ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற நிலையில் வெறுமனே குளிர்பான போத்தலிலுள்ள கேஸ் மாதிரி திடீரென முடிவெடுத்து திடீர் என்று தூக்கி எறிந்து விட்டு வரும் வேலையை செய்ய முடியாது, செய்யப்போவதுமில்லை.
ஒரு சுமுகமான ஒரு அரசியல் கூட்டமைப்பு தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதற்குள் பல அமைப்புகள் பல அரசியல் கட்சிகள், பல அரசியல் சிந்தனையுள்ள தலைவர்கள் எனக் கூறித் திரிகின்ற இனவாதிகள் கூட இருக்கின்ற ஒரு அரசியல் கட்சியாகத் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இக்கட்சியினுடைய தலைவராக ஜனாதிபதியாக இருந்து அரசியல் தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்கின்ற பொறுப்பு ஜனாதிபதி அவர்களுக்கு உள்ளது. இதனை நன்கு விளங்கியுள்ள ஒரு அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது.
இன்று நடைபெற்ற கலை, கலாசார விழாவை ஏற்பாடு செய்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்கள். இவர்களது இந்த முயற்சி எதிர்காலத்தில் இதைவிட சிறப்பாக அமைய வேண்டும் இதற்காக இவர்கள் பாடுபட வேண்டும்.
எமது கலை, கலாசார விழாக்களில் இஸ்லாமிய கலாசாரங்களை இணைத்துக் கொள்வது அவசியமாகும். இந்த இளைஞர் கலாசார விழாவிலே பொல்லடி, சிலம்படி, சீனடி போன்றவைகளை இணைத்தால் அவை புதிய சமுதாயத்துக்கு ஒரு விழிப்பாக அமையும். குறிப்பாக இஸ்லாமிய வரலாறுகள் கூட இன்றுள்ள இளம் சந்ததியினருக்கு மறந்து போயுள்ள நிலை உள்ளது. இஸ்லாமிய உணர்வு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை சித்தரதித்துக் காட்டக் கூடியதாக, வரலாற்றில் நடந்த இஸ்லாமிய யுத்தங்கள் அதன் விளைவுகள், சஹாபார்க்கள் செய்த தியாகங்களைப் பற்றி எடுத்துச் செல்லக்கூடிய வகையில் எமது கலை கலாசாரங்களை எடுத்துக்கூறும் நிகழ்வாக அடுத்த தடவை நடைபெறும் நிகழ்வு அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார். இளைஞர் அமைப்பு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதம அதிதி நசீர் அஹமட் உட்பட அதிதிகளும் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
-தினகரன்
Leave a comment