ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட ஏறாவூர் மைலம்பாவெளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 07.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏறாவூர் மைலம்பாவெளி பிரதானவீதியில் பொலிஸ் காவலரணுக்கு முன்னாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை 07.30 மணியளவில் EP – MU 4447 இலக்கமுடைய ஹீரோ ஹோண்டா பெசன் பிளஸ் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் வீதியில் மோதுண்டு தடக்கி விழுந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துக்கு உள்ளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி (ஓட்டுப்பள்ளி வீதி) மற்றும் பிச்சைக்குட்டி றியாஸ் முஹம்மது தாஹிர் (மிச்சி நகர்) ஆகிய இருவருமே மரணமாகியுள்ளனர். இவர்களது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மரணித்த இருவரில் அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி என்பவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் என்றும் மற்றவர் மரக்கடையில் ஊழியர் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment