
பழுளுல்லாஹ் பர்ஹான்
மஞ்சந்தொடுவாய்: மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு குழாய் நீர் வழங்கும் விடயத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பல்வேறு காரணங்களை காட்டி புறக்கனித்து வருவதாக ஸ்ரீ. ல. மு. கா மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என். கே. றம்ழான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுனாமிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நான்காம் கட்ட நிதியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நீர்க்குழாய்கள் பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது மஞ்சந்தொடுவாய் தெற்கு பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட சுமார் 5கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட பகுதி குறித்த நீர்க்குழாய் பதிக்கும் திட்டதில் உள்வாங்கப்படாமல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் புறக்கனிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியேற்றம் இல்லாத பல பகுதிகளில் நீர்க்குழாய்கள் பதிக்கப்பட்டு வந்த போதிலும் குடியேற்றம் நிறைந்து காணப்படும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மஞ்சந்தொடுவாய் தெற்கு பிரதேசத்திற்கு நீர்க்குழாய்கள் பதிக்கப்படவில்லை.
குறிப்பிட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்ட மஞ்சந்தொடுவாய் கிராமத்திற்கு நீர்க்குழாய்களை பதித்து சுத்தமான குடிநீரை வழங்குமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளிடம் நேரடியாக பலரால் பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன் அப்பகுதியின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இதனை பிரஸ்தாபித்தும் இருந்தனர்.
இவ்வாறான நீண்ட பிரயத்தனத்தின் பின்னர் குறித்த மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு நீர்க்குழாய்களை பதித்துத் தருவதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை முன்வந்ததுடன் அப்பிரதேசத்தில் நீர்க்குழாய்களை பதிப்பதற்காக தோன்றப்படும் வீதிகளின் இடிபாடுகளை மாநகர சபை முழுமையாக பொறுப்பேற்று புனரமைத்துக் கொள்வதற்கான உத்தரவாதத்தினையும் அதற்கான அனுமதியையும் பெற்றுத்தருவதுடன் நீர்க்குழாய்களை வடிகாலமைப்பு சபையின் களஞ்சியத்திலிருந்து குறித்த இடத்திற்கு ஏற்றி இறக்குவதற்கான ஏற்பாடுகளையும் கொடுப்பனவுடன் இரண்டு கூலி ஆட்களையும் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர்.
மேற்படி வேண்டுகோளுக்கு அமைவாக அப்பிரதேசத்தின் பிரதானமான எட்டு வீதிகளை தோன்றி குழாய் பதிப்பதற்கான மாநகர முதல்வரின் அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததுடன் மாநகர சபையின் வாகனத்தினையும் ஆளணியினையும் பயண்படுத்தி நீர்க்குழாய்களை ஏற்றி குறித்த பிரதேசத்தில் இரு இடங்களில் களஞ்சியப்படுத்தியதுடன் இரண்டு கூலி ஆட்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
குறித்த நீர்க்குழாய்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு ஓரிரு தினங்களில் எதுவித அறிவித்தல்களும் இன்றி நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மீள ஏற்றிச் செல்லப்பட்டு விட்டது.
அது விடயமாக வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த பகுதிக்கு நீர்க்குழாய் பதிக்கும் வேலைத்திட்டத்தை கொந்தராத்து ஒப்பந்தம் ஒன்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிக விரைவாக அப்பகுதிக்கான நீர்க்குழாய் பதிக்கும் வேலைத்திட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் பல மாதங்களாகியும் நீர்க்குழாய் பதிக்கும் வேலைத்திட்டம் இடம்பெறவில்லை அத்துடன் அப்பகுதியில் சில வீதிகளுக்கு கொங்ரீட் இடும் வேலை ஆரம்பிக்கவுள்ளதால் நீர்க்குழாய் பதிக்கும் வேலையை உடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டபோது குறித்த பகுதியிலிருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்குறிய விண்ணப்பங்கள் மிகக்குறைவாகவே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள பகுதிகளுக்கே தங்களால் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதியிலிருந்து அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அப்பகுதிக்கு உடன் நீர்க்குழாய் பதிக்கும் நடவடிக்கை இடம்பெறும் என தெரிவித்தனர்.
அதற்கு அமைவாக சுமார் நூறு அளவிலான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததுடன் ஐம்பதுக்கும் அதிகமானவர்களால் நீரிணைப்பு பெறுவதற்கான கட்டணமும் செலுத்தப்பட்டு சுமார் ஒரு வருட காலம் கடந்து விட்ட நிலையிலும் இன்றுவரையும் மஞ்சந்தொடுவாய் தெற்கு பிரதேசத்திற்கு நீர்க்குழாய்களை பதிக்காமலும் நீரிணைப்பு வழங்கங்காமலும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள் திட்டமிட்டு புறக்கனித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு பிரதேசத்திற்கும் விதிக்கப்படாத நிபந்தனைகளை மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு விதித்த போதிலும் அதற்கு அமைவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கப்பட்டும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
Leave a comment