
பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல பள்ளவாயல் மையவாடிக்காணிகளும் அரச காணிகளாகும் அதில் யாரும் எந்தப் பள்ளி நிர்வாகமும் உரிமை கொண்டாட முடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர்,
நாங்கள் மையவாடிக்காணிகளை அத்துமீறுவதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் ஒரு போதும் மைய்யவாடிக்காணிகளை எடுக்கவோ ஆக்கிரமிக்கவோ மாட்டோம் அது ஒரு போதும் இடம்பெறமாட்டாது. இடம்பெறக்கூடாது.
காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள மையவாடிக்காணிகள் எதுவும் எந்த பள்ளிவாயல்களுக்கும் சொந்தமானதல்ல அந்த மைய்யவாடிக்காணிகள் அரசாங்க காணிகளாகும். அரசாங்க காணிகளுக்கு நகரசபையே பொறுப்பாகும்.
ஜாமியுழ்ழாபிரீன் அரச மையவாடிக்காணியில் காத்தான்குடி நகர சபையின் கட்டிடத்தை அமைத்து நகர சபையை விசாலப்படுத்தி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டோம்.
ஆனால் அதற்கு பல பேர் முட்டுக்கட்டைகளாக திகழ்கின்றனர். அரசியலில் பிரவேசித்த நான் கடந்த 25 வருடங்களாக என்னை இந்ந ஊர் மக்களுக்காக அர்ப்பணித்து வருகின்றேன்.
ஆனால் எனது அபிவிருத்தி நடவடிக்கைகளை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர்களே இதனையும் எதிர்க்கின்றனர்.
எனக்கு நீங்கள் அளித்த வாக்குக்கு நான் இறைவனிடத்தில் பதில் சொல்லும் வகையில் நான் வேலை செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த ஊரில் நான் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன்.
நான் தவறிழைக்கின்றேன் அல்லது அபிவிருத்தி வேலைகளில் மோசடி செய்கின்றோம் என்று நிரூபித்தால் அரசியலிலிருந்து நான் ஒதுங்கத் தயாராகவுள்ளேன். பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். ஏதாவது பிரச்சினை என்றால் என்னோடு பேசுங்கள் நான் இல்லாத பட்சத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்குடன் அல்லது எனது மசூறா குழுவுடன் பேசுங்கள்.
பள்ளிவாயலில் பாங்கு சொல்லி மக்களையும் முஸ்லிம் சமூகத்தையும் தூண்டி பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள்.
முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடாத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்களாகிய எங்களுக்கு உள்ளது.
குறித்த ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிப் பிரச்சினை வெறுமனே தூண்டிவிடப்பட்ட ஒரு நாசகார செயலாகும் இதற்கு ஒரு போதும் அடிபணியாது நமது ஊரின் அபிவிருத்திக்காக நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றாக செயற்படுவோம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
Leave a comment