காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு

w460[1]கொழும்பு: காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படைக்குச் சொந்தமான படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் நேற்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 04, பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து நேற்றுக்காலை கடற்படையினர் சடலத்தை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இந்தத் திடீர்ச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் சிகிச்சை பெற்று மீண்டும் கடற்படைத் தலைமையகத்திற்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு விழா அணிவகுப்பு நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்றது. கடற்படையின் அணிவகுப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது காலி முகத்திடல் கடலில் கடற்படைக் கப்பல்களும் படகுகளும் அணிவகுத்து சென்றன.

இதன் போது தமது சாகசங்களையும் காண்பித்தது. இதன் போது சிறிய ரக படகு ஒன்று எதிர்பாராத விதத்தில் திடீரென கவிழ்ந்ததில் அதில் சென்ற இருவர் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர் தப்பியதுடன் மற்ற கடற்படை வீரர் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய கடல் பரப்பில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட கடற்படை கப்பல், சுழியோடிகளும் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

– தினகரன்

Published by

Leave a comment