– பழுளுல்லாஹ் பர்ஹான்
ஏறாவூர்: இன்று பொதுபலசேனா என்ற ஒரு அமைப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றதை அவதானிக்கலாம் என மாகாண கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவருத்தி கைத்தொழில்,அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் அல்நஹ்ல் இளைஞர் கழகம் கடந்த வெள்ளிக்கிழமை (17.05.2013) நடாத்திய இளைஞர் கலை கலாசார விழா 2013 இல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனதுரையில்,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இந்த அரசிலிருந்து வெளியேறமாட்டாது. முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்ற யார் யார் சதி செய்கிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் சரியான தக்க பாடத்தை முஸ்லிம் காங்கிரஸ் புகட்டும். ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை வைத்த கட்சியாக உள்ளோம் என
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது நேர காலத்தோடு முடிவுகளை எடுக்கும் ஒரு அரசியல் கட்சியாக ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் அப்படியான அரசியல் திருத்தங்கள் வந்து, மாகாண சபையினுடைய அரசியல் அதிகாரத்தைக் குறைக்கின்ற அல்லது முஸ்லிம்களுடைய அரசியல் அதிகாரத்துக்கு ஒரு களங்கம் விளைவிக்கின்ற எந்த ஒரு அரசியல் தீர்வு வருமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக அந்த அரசியல் தீர்வுக்கு ஆதரவு அளிக்காதது மாத்திரமல்ல தீவிரமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு கட்சியாக அப்போது இருக்கும்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் வெளியிடுகின்ற முடிவுகளை கடைசி நிமிடம் வரைக்கும் அதை நன்கு பரிசீலித்துப் பார்த்து விட்டு, சரியான முடிவுகளையும், தீர்ப்புக்களையும் எடுப்போம் என்று எங்களுடைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பற்றி இன்று நாடாளாவிய ரீதியிலே பல வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அரசாங்கத்திலிருந்து தூக்கி வீசி விட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். எங்களுடைய கட்சிக்குள்ளும். வெளியிலேயும், சில ஊடகங்களும், எங்களை எவ்வாறு வெளியே அனுப்பி இந்த சமூகத்தின் நிலைப்பாட்டை புதினம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு நாங்கள் சொல்லுகின்ற விடயம் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இந்த அரசாங்கத்தை விட்டு வெறுமனே எந்த வித நியாயமுமின்றி வெளியேறுவதற்கு தயாராக இல்லை என்ற உத்தரவாதத்தை எங்களது தலைவர் தெளிவாக எடுத்துள்ளார். என்பதை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
சமூகத்தைப் பாதிக்கின்ற ஒருவிடயம் அல்லது சமூகத்தினுடைய அதிகாரம் பறிக்கப்படுகின்ற விடயமாக இருந்தால், சமூகத்திற்கு, ஈடுகட்ட முடியாத நிறைய பிரச்சனைகளை கொடுக்கின்ற நிகழ்வுகள் உருவாக்கப்பட்டு, அதற்கு சட்டபூர்வமாக அரசிலுள்ள எங்களது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் அல்லது அரசிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் பங்காளியாக இருப்பார்களேயானால் நிச்சயமாக பதவிகளை தூக்கி வீசி விட்டு வருவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு நிமிடம் கூட தயங்கமாட்டாது. ஆனால் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம். இவ்வாறான மோசமான அரசியல் தகவல்களை வெளியிடுகின்றவர்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லி வருகின்றோம். எங்களுடைய முடிவுகளை எடுக்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில ஊடகங்கள் இந்த முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை நாங்களும், தலைவர் ரவூப் ஹக்கீமும் மிகவும் தெளிவாக தெரிந்து கொண்டுள்ள அதே வேளையிலே ஜனாதிபதி மீது நாங்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கின்றோம்.
இன்று பொதுபலசேனா என்ற ஒரு அமைப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்ற ஒரு நிலையை நாங்கள் காண்கின்றோம். ஆகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆனது ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற நிலையில் வெறுமனே குளிர்பான போத்தலிலுள்ள கேஸ் மாதிரி திடீரென முடிவெடுத்து திடீர் என்று தூக்கி எறிந்து விட்டு வரும் வேலையை செய்ய முடியாது செய்யப் போவதுமில்லை.
ஒரு சுமூகமான ஒரு அரசியல் கூட்டமைப்பு தான் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இதற்குள் பல அமைப்புகள் பல அரசியல் கட்சிகள், பல அரசியல் சிந்தனையுள்ள தலைவர்கள் எனக் கூறித் திரிகின்ற இனவாதிகள் கூட இருக்கின்ற ஒரு அரசியல் கட்சியாகத் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இக்கட்சியினுடைய தலைவராக ஜனாதிபதியாக இருந்து அரசியல் தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்கின்ற பொறுப்பு ஜனாதிபதி அவர்களுக்கு உள்ளது. இதனை நன்கு விளங்கியுள்ள ஒரு அரசியல் கட்சியாக ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது.
இன்று பரவலாக பேசப்படுவது முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த அரசில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள் என்று பேசப்படுகிறது. நாங்கள் மட்டும் எதுவுமே செய்ய முடியாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கவில்லை. ஆனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறோம் என்று கூறுகிறவர்களும் தான் இந்த அரசில் குந்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் குந்திக் கொண்டு இருக்க வேண்டும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும். இது தான் இன்றைய அரசியலில் உள்ள யதார்த்த நிலை இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கான ஒரு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மட்டும் தான் இதனை ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மட்டும் தான் வென்றெடுக்க முடியும் முஸ்லிம்களுடைய அரசியல் உரிமையையும் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒரே ஒரு பலம் வாய்ந்த பேரம் பேசக் கூடிய சக்தியாக ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது என்பதை கூறிக் கொள்ள விரும்புவதோடு இலங்கையிலுள்ள அதி பெரும்பான்மையான முஸ்லிம்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பெரும்பான்மையான ஆணையையும் ஆதரவையும் தந்துள்ளார்கள் என்பதையும் இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


Leave a comment