எளில் கொஞ்சும் ஊர் என்று சொல்லாவிட்டாலும் ஓர் சமூக உணர்வுடன் வாழக்கூடிய ஓர் முஸ்லிம் ஊரில் வாழ முடிவதால் ஓரளவு எனக்குள் மகிழ்ச்சியடைகிறேன்.
க.பொ.த உ/த இரண்டாம் வருடத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கிறேன். எனது வகுப்பில் 40 மாணவிகள் இருக்கின்றனர். சுமாரான குடும்பத்தில் பிறந்தாலும் கௌரவமாக எங்களது குடும்பம் அன்று முதல் இன்றுவரை பரம்பரை பரம்பரையாக அவ்வூரில் வாழ்ந்து வருகிறோம்.
இஸ்லாமிய பூமி என்பதற்கு அங்கு என்ன குறைச்சல்! தெருவுக்கு ஒரு பள்ளி, நாலு தெருவுக்கு ஒரு ஜூம்ஆ பள்ளி!! ஐவேளையும் பாங்குச் சத்தங்கள் காதை வந்தடவதைவிட்டும் வேறு என்ன தேவை இருக்கிறது.
நான்கு பேருக்கு மத்தியில் நான்கு கலாச்சாரங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என எனது மனது சொல்லும். ஆனால் எனக்கென்று சில வரையறைகள் இருக்கின்றன.
ஒருவகுப்பில் 40 பிள்ளைகள் இருந்தால் 10 பிள்ளைகள் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஒன்றில் குடும்பத்துக்குத் தெரிந்திருக்கும் அல்லது மறைமுகமாக சென்றகொண்டிருக்கும் அவர்களது காதல்.
அதில் 10 பிள்ளைகள் அடிப்படை வசதிகள் குறைந்த பிள்ளைகளாக இருப்பார்கள். கை நீட்டி பிறரிடம் கேட்க முடியாத நிலையில் படிப்பொன்றே எதிர்காலம் என கல்வியில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பார்கள்.
பொதுவாக 30 பிள்ளைகளாவது இண்டர் நெட், பேஸ்புக், ஈமெயில், யூ டியூப், ஸ்கைப்..என்று பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுள் 20 பிள்ளைகளின் சகோதரர்கள் அல்லது உறவினர்கள் வெளிநாடுகளில் வசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இப்போதெல்லாம் அடுத்தவர்களை குறிப்பாக அயலவர்களை மக்கள் மதிப்பதே இல்லை! உயர்ந்த நான்கு சுவர்களுக்குள் அடுக்குமாடிகள் வானைத் தொட்டதால் நாங்கள் தாழ்ந்துவிட்டோம் கூரையளவில். எனினும் கல்வியிலும் கௌரவத்திலும் எந்தக் குறைச்சலும் எங்களுக்கில்லை! அல்ஹம்துலில்லாஹ்.
ஏட்டிக்குப் போட்டியான வியாபாரத்திலும் ஆடம்பரத்திலும் வீடுகளை அடைமானம் வைக்கவில்லை, வட்டிக்கும் முயற்சித்ததில்லை, அவர் பைக் வாங்கினால் நாங்கள் கார் வாங்கனும் என்ற தேவையும் எங்களுக்கில்லை. அதனால் ஊரைவிட்டும் ஓடவேண்டிய தேவையும் இல்லை எங்களுக்கு.
முச்சக்கர வண்டியில் மாதாந்தம் பணம் கொடுத்து வகுப்புக்குப் போய் வருவதற்கு எங்கள் குடும்ப வருமானம் போதாது! அதனால் எப்பொழும் நடையே எனக்குதவி. என்பின்னால் அவ்வப்போது பல இளைஞர்கள் காவலுக்கு வருவதையறிந்து என் அழகிலும் குறைச்சல் இல்லை என்பதை உணர்கிறேன். அதற்காக பெருமைப்படவுமில்லை!
இப்போதெல்லாம் வகுப்புக்களில் பாடங்களை பகிர்வதிலும் பார்க்க லப்டப் இல் படம் பார்த்தேன்…. இண்டர் நெட்டில் ஜோக் பார்த்தேன், ஈமெயிலில் கடிதத்தைப் பார்த்தேன், வெப்சைட்டில் செய்தியைப் போட்டிருக்காங்க… என்றெல்லாம் பிள்ளைகள் கதைக்கிறாங்க.
அவரு 3 ஜி போன் அனுப்பினாரு, நானா-மாமா லப்டப் அனுப்பியிருக்காரு, காதலன் ரீ லோட் அனுப்பிட்டிருக்காரு, மெசேஜ் அனுப்பி இருக்காரு… அப்பாடா வகுப்புக்கு வந்தது முதல் வீடு திரும்பும்வரை ஒருவராவது இவற்றைக் கதைக்காமல் பொனதே இல்லை.
அவள் அவரோட போனயாம், ஓடிப் போனயாம், கையைப் பிடித்தயாம்…. என் தாயாருடன் பகிர முடியாத வார்த்தைகள் இன்றைய சமூகத்தில் எங்களது காலத்தில் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் ஆண்-பெண் என்பதை சேர்த்துப்பார்க்கவே தயங்கிய அவ்வூர் மக்களுக்கு இன்று சகஜமான வார்த்தைகள் இவை!
இப்போதெல்லாம் மேற்கத்தேய நாடுகள் போல் அவ்வூர் சென்று விட்டது. யார் என்ன செய்தாலும் கேட்பதில்லை, பார்ப்பதில்லை, தண்டிப்பதில்லை. காதுகளுக்குக் கேட்கும் ஆபாச வாரத்தைகளும், ஆபாச கதைகளும் தெருவில் ஒலிக்கும் வானொலிகளின் பாடல்கள் போல் ஒரு காதால் வந்து மறு காதால் சென்று விடுகிறது. யார் யாருடனும் பழகலாம், பேசலாம் என்ற உணர்வு பிள்ளைகளிடத்தில் வந்து விட்டது. அமெரிக்கா ஸ்டைலில் பிள்ளைகள். செக்ஸ் என்றால் கூட கல்வி அளவில் பாரக்கும் அளவுக்கு முன்னேறி விட்டது.
நான் ஒவ்வொரு முறை கல்விக்காக தனியாகச் சென்று மீண்டும் திரும்பும் வரைக்கும் என் தாயின் இதயங்களில் எத்தனை எதிர்பார்ப்புக்கள், பயம், பிராத்தனைகள் இருக்கும் என்தை நினைக்கிறேன். பாவம் அவள். எத்தனை நாட்களுக்குத்தான் எந்நேரமும் ஓரே ஒரு அபாயாவுடன் என் பின்னால் வரமுடியும்?
“நீங்க இருங்க உம்மா. எனக்கு என்னில் நம்பிக்கை இருக்கு. தம்பி, தங்கச்சியைப் பார்த்துக்கொள்ளுங்க. வகுப்புக்குப் போயிட்டு வாரேன்” என்று எப்போதெல்லாம் என் மனதால் நினைத்து வாயால் சொல்கிறேனா…… அந்தத் தாயை ஏமாற்ற எனக்கு முடியாது.
எனக்கும் பருவயதுதான்! என் தாயை விடவும் இப்போதைய கேடுகெட்ட நாகரிகத்தில் எல்லாமே எனக்கும் தெரியும். காதல், காமம், கூடல் இவைகளெல்லாம் ஓர் பெரிய விடயமே அல்ல!
என் பிள்ளைக்கு ஓடிப்போனவளின் பிள்ளை என்றோ, காதலித்து அசிங்கமானவன் பிள்ளை என்றோ எதிர்காலத்தில் இந்தச் சமூகம் சொல்லக்கூடாது. வாழையடி வாழையாக வாழும் எனது குடும்பத்தில் அன்று என் பெற்றோர்கள் கௌரவமாக இருந்ததால்தால் நான் தைரியமாக இந்த மண்ணில் இன்று கால் பதிக்கிறேன். நாளை எனது பிள்ளையும் இம்மண்ணில் கலங்கமில்லாமல் கால் பதிக்கவேண்டும்… அவள் என் பிள்ளையாக…
‘உம்மா நீங்க சாப்பிடுங்க.. நான் கிளாஸ் போயிட்டு வாரேன்’
![mom_and_me__by_Muslim_Women[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/mom_and_me__by_muslim_women1.jpg?w=105&h=94)
Leave a comment