கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ தலைமையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள யுத்த வெற்றி நிகழ்விற்காக, படையினர் நேற்று காலி முகத்திடலில் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வெற்றிவிழா அணிவகுப்பில் 11 ஆயிரம் இலங்கைப் படையினர் பங்கேற்கவுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் வரும் 18ம் நாள் காலி முகத்திடலில் நடக்கவுள்ள விழாவில் இலங்கை படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இதில் 6.350 இலங்கை இராணுவத்தினர், 1,300 இலங்கை கடற்படையினர், 1,300 இலங்கை விமானப்படையினர், 1400 இலங்கை காவல்துறையினர், 676 சிவில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 11 ஆயிரம் இலங்கைப் படையினர் பங்கேற்கவுள்ளனர்.இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பில் ஆட்டிலறிகள், பல்குழல் ரொக்கட் செலுத்திகள், பொறியியல் வாகனங்கள், டாங்கிகள் உள்ளிட்ட 100 கவச வாகனங்கள் இடம்பெறவுள்ளன.
இலங்கை கடற்படையின் சார்பில் பீரங்கிப் படகுகள், அதிவேக தாக்குதல் படகுகள். சிறிய ஆரோ வகைப் படகுகள் உள்ளிட்ட 50 போர்க்கலங்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.மேலும் இலங்கை விமானப்படையில் உள்ள போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட 30 வான்கலங்களும் இதில் பங்கேற்கவுள்ளன.
இந்த அணிவகுப்புக்கான ஒத்திகைகள் தற்போது காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகிறது.2009ம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கம் இந்தப் போர் வெற்றிவிழாவை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-அரசாங்க தகவல் திணைக்களம்


Leave a comment