பழைய அசாத் சாலியை இனிமேல் காணமுடியுமா?

asad_sali_[1]– அபூ இஸ்ஸத்

கொழும்பு: கடந்த 2ம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத் சாலி, தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்புக் கோரியதன் காரணமாக விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், அசாத் சாலி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு எழுதி அனுப்பிய கடிதங்களின் உள்ளடக்கம் பற்றியோ, நிபந்தனைகள் பற்றியோ யாருக்கும் தெரியாது!

சுமார் கடந்த 6 மாதங்களாக, அதாவது பொது பல சேனாவின் ஹலால் பொருட்களின் எதிர்ப்புக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்களிடத்தில் ஓர் முஸ்லிம் சமூகத்தின் போராளி என்ற அடிப்படையில் அசாத் சாலி பிரபல்யமடைந்து வந்தார்.

பத்திரிகை மாநாடுகளிலும், மேடைப்பேச்சுக்களிலும், செவ்விகளிலும் அரசாங்கத்தையும், பொதுபல சேனாவையும் பகிரங்கமாக விமர்சித்து, இவர்களின் கண்மூடித்தனமான செயற்பாடுகளை கண்டித்து வந்ததால், அரசியல் கொள்கைகளில் வேறுபட்டிருந்த பல முஸ்லிம்களும், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக அசாத் சாலியின் பக்கம் சார்ந்து வந்திருந்தனர்.

அரசாங்கத்துக்கும் அசாத் சாலிக்குமிடையில் ஓர் இரகசிய உடன்படிக்கை அல்லது அவரது குடும்பத்தினருடனான கோரப்பட்ட சில நிபந்தனைகளுக்கு அடிப்படையில் அசாத் சாலி விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

எனினும், அசாத் சாலியின் உண்ணாவிரதத்தின் காரணமாக அவரது உடல் பலவீனம் அடைந்து வருவதாலும், தப்பித்தவறி ஏதாவது உயிராபத்து நிலைமைக்கு அசாத் சாலியின் உடல் நிலை சென்றுவிட்டால், அதைவிட பாரிய பயங்கரமான சவால்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கும். எனவே அசாத் சாலியின் மோசமான உடல் நிலைத்தாக்கமும் அவரை விடுவிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

இன்று அவர் விடுவிக்கப்பட்டு, அவருக்காகக் குரல்கொடுத்த நண்பர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று வைத்தியசாலைக்குச் சென்று அவரைச் சந்தித்தாலும், பழைய அசாத் சாலியாக அவர் மீண்டும் இந்நாட்டு அரசியலில் இணைந்து கொள்வாரா? அல்லது ஆளும் அரசாங்கத்தில் இருக்கும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களைப் போன்று, எதிர்காலத்தில்  வாய் மூடி மௌனம் காப்பாரா? என்பது தெரியவராத உண்மை!

இதே போல் நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தது போல், கொழும்பு அரசியலில் ஏற்கனவே அரசாங்கம் ஆட்டம் கண்டுவருகின்றது. அசாத் சாலியின் கைதுக்குப்பின்னர், பல மடங்கு எதிர்ப்புக்கள் முஸ்லிம்களிடத்தில் அரசாங்கத்தின் மேல் எழுந்து வந்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஐ.தே.க. மென்மேலும் கொழும்பு முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டும் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அசாத் சாலியின் கைது மற்றும் அவரது விடுதலைக்குப் பின்னர் பிரதானமாக மூன்று விடயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

1. அரசாங்கத்ததை விமர்சித்தால் இனிமேல் இதுதான் பதில் என்பது அசாத் சாலியின் கைதுக்குக்குப் பின்னர் மக்களுக்கு தெளிவு படுத்துகிறது. (அரசாங்கத்தின் அதிகாரம்)

2. அசாத் சாலியின் கைதுக்குப் பின்னர் தனக்கும், தனது அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட அவதூற்றை அகற்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், தனது மனிதாபத்தை உலகுக்கு காண்பித்து, நிரூபித்திருக்கின்றார். (முஸ்லிம் மக்களின் ஆதரவு )

3. பொது மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் அழுத்தமான போராட்டங்களும், விமர்சனங்களும். (மக்கள் எழுச்சி)

எனவே, தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கும் அசாத் சாலி, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதி மன்றம் செல்லவிருக்கின்றார். அவரது உடல் நிலையைக் கருத்திற்கொண்டு, சில வேளை விசாரணைகள் தாமதிக்கலாம்.

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட வழக்குகள் தொடர்ந்தும் இடம்பெறும். இத்தகைய வழக்குகளும், விசாரணைகளும் பல மாதங்கள் நீண்டு கொண்டே போகலாம்.

இதனால், அன்று முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்த அசாத் சாலியை இன்று, ஓர் சிறைக் கைதி போலவே முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கப்போகின்றது என்பது மாத்திரம் நிச்சயம்!

Published by

Leave a comment