சட்டத்தின் ஆட்சிக்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை இன்றியமையாதது- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

DSC_0366– பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: சட்டத்தின் ஆட்சிக்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை இன்றியமையாதது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (10) முற்பகல், பத்தரமுல்லை, பெலவத்தையில் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைத்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். நீதியமைச்சரின் அழைப்பின் பேரில் இந்த வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி முன்னதாக, பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து இந்தக் கட்டடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

பின்னர், ஜனாதிபதியும், அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் ஏனைய பிரமுகர்களும் கட்டடத் தொகுதியை சென்று பார்வையிட்டனர்.

DSC_0366

இந் நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

முன்னர், கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் அமைந்திருந்த இடவசதி குறைந்த சிறிய கட்டிடத்தில் செயல்பட்ட அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், இப்பொழுது பாரிய கட்டிடத் தொகுதியொன்றில் நகரை அண்டிய பிரதேசத்தில் இயங்கத் தொடங்கியிருப்பது இதன் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகும்.

DSC_0285

சட்டத்தின் ஆட்சியைப் பொறுத்தவரை நீதியமைச்சின் கீழுள்ள அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆற்றி வரும் பணி அளப்பரியது. அது இலங்கை சுங்கத் திணைக்களம், சுகாதார அமைச்சு, உள்ளுராட்சி அமைப்புகள், துப்புத் துலக்கலில் பொலிஸ் திணைக்களம் என்பவற்றுக்கும் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை பெற்றுக்கொள்ளப்படுகின்றது. வழக்குத் தாமதங்களை வெகுவாக குறைப்பதற்கும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாது.

கோடிக்கணக்கான ரூபாய் பணச்செலவில் கொள்வனவு செய்யப்பட்டு இத் திணைக்களத்தில் பொருத்தப்பட்டுள்ள விஞ்ஞான உபகரணங்கள் சேதப்படாமல் அவற்றை நன்கு பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இக் கட்டடத்தை கண்ணும் கருத்துமாக பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் இங்கு உரையாற்றாதபடியால் என்னை கூறுமாறு ஜனாதிபதி வேண்டிக்கொண்டார். 

DSC_0373

கடந்த காலத்தில் இல்லாத இத்தகைய வசதி வாய்ப்புகளையும் இத் திணைக்களத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளும், ஊழியர்களும் சிறப்பாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும், எனக்கும் உண்டு.

வெறும் கனவாக இருந்த இந்த பாரிய கட்டடத் தொகுதி நனவாகுவதற்கு பங்களிப்புச் செய்தவர்களை நாம் நன்றியோடு இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறோம். ஜனாதிபதியின் உன்னத நோக்கும், முன்னெடுப்பும் இல்லாதிருந்தால் இந்த செயல்திறன்மிக்க பாரிய கட்டடத் தொகுதியை நிர்மாணித்திருக்க முடியாது.

1393 மில்லியன் ரூபா இதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு அமைந்துள்ள மரபணு இரசாயன பகுப்பாய்வு கூடத்திற்கு யூஎஸ்எய்ட் நிறுவனம் புறம்பாக 271,500 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.

DSC_0349

இந்த திணைக்களத்தின் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதோடு இதனை பேணிப் பாதுகாப்பீர்களானால் அந்த நற்செயலை இனிவரும் எமது பரம்பரையினர் மிகவும் நன்றியறிதலோடு நினைவுபடுத்துவார்கள்.

இந் நிகழ்வில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் ரீ.ஆர்.என்.எம். லியனாராச்சி ஆகியோரும் உரையாற்றினர். சட்டமா அதிபர் பாலித பெர்ணாந்து ஆகியோரும் உரையாற்றினர். முன்னாள் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள உயர் அதிகாரிகளும், பொலிஸ் திணைக்கள, நீதியமைச்சு உயர் அதிகாரிகளும் இதில் பங்குபற்றினர்.

பட விளக்கம்- நீதியமைச்சின் கீழ்வரும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் 1393 மில்லியன் செலவில் பத்தரமுல்ல, பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை முற்பகல் திறந்து வைத்த போது பிடிக்கப்பட்ட படங்கள்.

Published by

Leave a comment