அசாத் சாலி விடுதலை!

asadகொழும்பு: பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்தவாரம் கைது  செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

விடுதலை செய்யப்பட்ட அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகளான அமீனா சாலி உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அசாத் சாலி, 8 நாட்களாக உணவு-மறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமீனா சாலி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி காரணமாகவே அசாத் சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியது.இதேவேளை, அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் சார்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை எதிர்வரும் 28-ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடத்தில் இருந்து வந்த பாரிய எதிர்ப்பலைகளும், அஸாத் சாலியின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்கவும் அஸாத் சாலி விடுதலைசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

Published by

Leave a comment