ஹூப்பு,சுன்னி,தௌஹீத் என்பதைக் களைந்தெறிந்து- ஒன்றிணைந்து போராடுவோம்

Muslims[1]– முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான அமைப்பு

கொழும்பு: அஸாத் சாலியின் கைதுக்குப் பின்னர் அவருக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்துவரும் அனுதாபங்களை, அவரது தனிப்பட்ட சமய விடயங்களை அரசியலாக்கி, இவரை மீண்டும் சிறைப்படுத்த ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இருக்கும் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரை, முழு அமைச்சர்களும் ஹூப்பு-சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றும் சுன்னிகளாகவே இருந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும், மௌலீது, கொடியேற்றம், கந்தூரிகளில் பங்கெடுப்பது மாத்திரமன்றி பிர மத அனுஸ்டானங்களின் போது, குத்து விளக்கு ஏற்றி வைப்பதிலும், ஏனைய மதகுருமார்களை கைகும்பிட்டு வணங்குவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் ஹூப்பு, தௌஹீத், சுன்னி எல்லோரும் ஒரே மேடையில் பொம்மைகளாகவும், காட்சிப்பொருளாகவும் இருப்பதை எந்த ஒரு பொது மகனும் எதிர்ப்பதோ, விமர்சிப்பதோ இல்லை!

தேர்தல் வெற்றிக்காக, ஹூப்பு பள்ளிவாயலுக்குச் சென்று சோறு வாங்கிச் சாப்பிடுவதும், அவர்களுடன் முஸாபாச் செய்வதும் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் வேறிபாடில்லாமல் காலம் காலமாக இடம்பெற்றுவரும் ஓர் விடயம். ஏனெனில் இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஹூப்புக் கொள்கையை ஆதரிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் பொது பல சேனாவின் அடக்கு முறைகளை எதிர்த்து முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்து வந்த முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலியின் கைதுக்கு, ஆளும் அரசியல் தரப்பிலிருந்து, வியூகமான திசைதிருப்பல்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அஸாத் சாலி ஓர் தரீக்காவாதி என்றும், இலங்கையில் வஹாபிஸத்தை ஒழித்துக்கட்ட அயராது உழைப்பவர் என்றும் அவருக்கு முத்திரை குத்தப்பட்டு வருகின்றது.

அஸாத் சாலி மாத்திரமல் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை பிரதிநிதிகளும் இந்த வஹாபிஸத்தை இலங்கையை விட்டு அகற்றக்கூடிய ஹூப்பு கொள்கையில் இருந்து வருவதை மறக்க முடியாது.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல், மார்க்கப்பிரிவினைகளை கச்சிதமாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் தனது சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் நயவஞ்சகத்தனமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் நோக்கம் தங்களது கொள்கை இந்நாட்டில் நிலைத்திருக்க வேண்டுமே தவிர, முஸ்லிம்கள் நசுக்கப்படுவதில் அக்கறையில்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது.

விஸ்வரூபத்திற்கு தமிழ்நாட்டு இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் எவையும் பொதுபல சேனாவின் முஸ்லிம்கள் மீதான உரிமை பறிப்பிற்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வரவில்லை! ஹலாலை விட்டுக்கொடுத்த அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவுக்குக்கூட பொது பல சேனாவைக் கண்டிப்பதற்கு முடியாமல் போயிருந்தது.

இதே போல் தெவட்டகஹ குப்புக்களும் பொதுபலசேனாவின் அட்டூழியங்களை எதிர்ப்பதற்கு முன்வரவில்லை.

இந்நிலையில் இலங்கையைப் பொருத்தமட்டடில் இஸ்லாமிய இயக்கங்கள் எவையுமே பொதுபல சேனாவை எதிர்ப்பதற்கு முன்வரவில்லை. அது ஹூப்பாக இருந்தாலும், தௌஹீதாக இருந்தாலும் சரியே!

எனவே தேர்தல் காலங்களில் மாத்திரம் அற்ப வாக்குகளுக்காக எங்கள் இதயங்களில் இருந்து அகற்றப்பட்டுப்போகும்ஹூப்பு எதிர்ப்புவாதம் இன்று எங்கு போய்விட்டது என்பதை பகிரங்கமாக கேட்கிறோம்.

எனவே இப்படியே மார்க்கப்பிரிவுகளை தங்களது தேவைக்கு மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு, இந்நாட்டில் காலூன்றி போலிவேசம் போடுவதைவிட்டெறிந்து விட்டு, அல்லாஹ்விற்காக அனைவரும் ஒன்றிணைந்து, இஸ்லாத்துக்காக குரல்கொடுக்க முன்வந்து, முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என தயவுடன் கேட்கிறோம்.

அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் போதுமானவன்.

நன்றி

முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான அமைப்பு
கொழும்பு

Published by

Leave a comment