காத்தான்குடி: கடந்த புதன்கிழமை மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் உலகெங்கிலும் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக வழமைபோல் கொண்டாடப்பட்டது.
அத்தினத்தில் இலங்கையில்கூட வழமைபோல் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு, தலைநகர் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் அரசியல் பிரதிநிதிகள் முன்னின்று தொழிலாளர்களை ஊக்குவித்து, பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தலைநகரில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஜனாதிபதியும், எதிர்க்கட்சிக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவும் தலைமைதாங்கி இக்கூட்டங்களை சிறப்பித்திருந்தனர்.
ஆனால், காத்தான்குடியில் முச்சரக்கரவண்டிச் சாரதிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழிலாளர் தினக் கூட்டத்தில் இன்னாள் அரசியல்வாதிகள் எவரும் கலந்திருக்கவில்லை என்பது தொழிலாளர்களைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது தெளிவாகிறது.
இன்னாள் அரசியல் பிரதிநிதிகளுக்குப் பதிலாக முன்னாள் பிரதிநிதிகள் இருவர் மாத்திரமே இக்கூட்டத்தில் அதிதிகளாக கலந்திருந்து, தொழிலாளர்களின் தினத்தில் பங்கெடுத்தனர். அவர்களுள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான முபீன் ஆசிரியரும், பரீட் ஆகிய இருவருமே என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஓர் மலசலகூடத் திறப்பு விழா என்றால் கூட, பிரதியமைச்சர், மாகாணசபை உறுப்பினர், தவிசாளர், உதவித் தவிசாளர், ஊர்ப்பிரமுகர்கள் என படையெடுத்து பங்களிப்புச் செய்யும் இத்தருணத்தில், இந்த தொழிலாளர் தினத்தை இவர்கள் மதிக்கவில்லை’ என்பதாக காத்தான்குடி தொழிலாளர் சங்கத்தினரும், முச்சக்கரவண்டி உறுப்பினர்களும் தங்களது வேதனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதே போல், காத்தான்குடியின் எதிர்க்கட்சியாக இருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திலிருந்தும் எவரும் பங்கெடுக்கவில்லை எனவும் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.
‘தேர்தல் காலங்களில் மாத்திரம் தொழிலாளர்களை இலக்குவைத்து தந்திரமாக குரல்கொடுக்கும் இத்தகையவர்களை இனங்காண்பதற்கு இக்கூட்டம் ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்தது’ எனவும் இச்சங்கங்களின் மூத்த உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.



Leave a comment