– விசேட நிருபர்
காத்தான்குடி: காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகமும், காத்தான்குடி பரீட் பவுண்டேஸனும் இணைந்து கடந்த வாரம் விக்டரி மைதானத்தில் மின்னொளியில், விக்டரி விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் மஹ்ரூப் ஹாஜியார் வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை மிக விமர்சையாக நடாத்தியது.
இச்சுற்றுப்போட்டியில் சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் வீரர் பாயிஸ் என்பவர் காத்தான்குடி பதுரியா விளையாட்டுக்கழகத்துக்கு குறித்த சுற்றுப் போட்டியில் விளையாடியதால், குறித்த வீரருக்கு ஒரு வருடகால விளையாட்டுத் தடையை மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம் (BDFA) விதித்துள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக்கழகமும், காத்தான்குடி பதுரியா விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டியில் விளையாடி, பதுறியா விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.
சன்றைஸ் விளையாட்டுக் கழகம் குறித்த சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இச்சுற்றுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவினர் சன்றைஸ் விளையாட்டுக் கழகத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சன்றைஸ் விளையாட்டுக் கழக வீரர் பாயிஸ் பதுரியா விளையாட்டுக் கழகத்துக்கு விளையாடியமை, சுற்றுப்போட்டி விதிகளை மீறியமைக்கான குற்றமென எழுத்து மூலமாக நிறுபித்து, மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்த கடித மூலமான கோரிக்கைக்குப் பின்னர், ஒரு வருடகால விளையாட்டுத் தடையினை மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம் பாயிஸ் அவர்களுக்கு விதித்திருக்கின்றது.
இதற்கமைய, இவர் ஒரு வருடத்துக்கு உள்ளுர், மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment