கொழும்பு: அரசுக்கு சொந்தமானதென கூறி 100 கிலோ எடையுள்ள தங்கத்தை வைத்து பாரிய அளவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
100 கிலோ தங்கம் உள்ளதாகக் கூறி பாரிய அளவில் பண மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட பதினொரு பேரை கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 11 பேரில் ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர், பிரபல விளையாட்டு வீரர் ஒருவரின் மனைவி, விமானப் படை மற்றும் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் இருவரும் அடங்குவர்.
அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும், அரசாங்கத்திடமிருந்து நிவாரண அடிப்படையில் பெறப்பட்ட தங்கம் என கூறியுமே இந்த மோசடி நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய ஒரு கிலோ தங்கத்தை 50 இலட்சம் ரூபா வீதம் 100 கிலோ தங்கத்தை 5000 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்தே இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முற்பணமாக நூறு இலட்சம் ரூபா தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-
நூறு கிலோ தங்கத்தை வைத்து கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடுக்கல் வாங்கல் மற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவலை அடிப்படையாக வைத்து கொழும்பு வடபிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் வியாபாரிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் பொலிஸ் குழுவினர் தங்கத்தை கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் போன்று மாறுவேடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று தங்க விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஒரு கிலோ தங்கம் ஐம்பது இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் 100 கிலோ தங்கத்தையும் கொள்வனவு செய்ய இதன்போது வியாபார கும்பலும் வர்த்தகர்கள் போன்று மாறுவேடத்தில் சென்ற குழுவினரும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
பண கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பேசுவதற்கு மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் மேலும் இரண்டு நபர்களும் குறித்த ஹோட்டலுக்கு வந்துள்ளனர். இதன் போது முதற்கட்டமாக 100 இலட்சம் ரூபா கோரப்பட்டுள்ளன. பணப் பரிமாற்றத்தின் போது மேலதிக நம்பிக்கையை கருத்திற்கொண்டு காசோலை வழங்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்டு தங்கத்தை வழங்குவதற்கு ஹோமாகம பிரதேசத்திற்கு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. வியாபாரிகளைப் போன்று நடித்துவரும் பொலிஸ் குழுவினர் ஹோமாகம பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் சென்றுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரகுமார என்பவர் மேற்படி குழுவினரை அழைத்துக்கொண்டு முன்னாள் பொலிஸ் அத்தியட்சகரை சந்திக்க சென்றுள்ளனர்.
பத்தரமுல்லை, பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள மலர் விற்பனை நிலையத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் வைத்து இவர்களை சந்தித்து உள்ளனர்.
அங்கிருந்த ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி கடற்படையின் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கதைத்ததையடுத்து அந்த கடற்படை அதிகாரி அந்த இடத்திற்கு வருகை தந்துள்ளதுடன் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் தங்கம் உள்ளதாகக் கூறியுள்ளார். அந்த இடத்திற்கு வருகை தந்துள்ள ஓய்வுபெற்ற விமானப் படை, கடற்படை அதிகாரிகள் இருவரும் இணைந்து மேற்படி குழுவினரை நுகேகொட பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் அந்த இடத்திற்கு தங்கத்தை எடுத்துக் கொண்டு வர ஏற்பாடாயிருந்த போதிலும் அவர் அங்கு வராமல் அவரது மனைவியை அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு வந்த அந்தப் பெண்மணி கிரிஷாந்த என்பவருடன் தொடர்புகொண்டு பணம் எல்லாம் தயாராக உள்ளது. 100 கிலோ தங்கத்தை எடுத்துக்கொண்டு வருமாறு கூறியுள்ளார். எனினும் கிரிசாந்த என்ற நபர் அந்த இடத்திற்கு வராமல் அவரது தொலைபேசியையும் துண்டித்து வைத்துள்ளார்.
இங்கிலாந்து பிரஜா உரிமை பெற்ற அவர் பல்வேறு வியாபார நடவடிக்கைகளுக்காக அடிக்கடி இலங்கை வந்து செல்பவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி வியாபாரத்துடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிரிஷாந்த என்பவர் அரசுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றில் சேவையாற்றுவதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறிய போதிலும் அது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. அவர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதை தடுப்பதற்கு தேவையான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது திருடப்பட்ட தங்கத்தை இந்தக் குழுவினர் இவ்வாறு இரகசியமாக விற்பதற்கு தயாராக இருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லை எனில் தங்கம் கொள்முதல் செய்வதாக கூறி நிதி மோசடியில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டது.
கொழும்பு வட பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கமைய வடகொழும்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உபுல் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர்களான ஏ. எல். எம். ஹஸன், வருன், அனில் பிரியந்த, டபிள்யூ. ஏ. பியசிரி, ஐ. பி. ஜி. ஜயரத்ன உட்பட அதிகாரிகள் இந்த விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-தினகரன்
Leave a comment