
பழுலுல்லாஹ் பர்ஹான்
முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே ஆஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக நாடுபூராவும் முஸ்லிம் சமூகத்திற்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக ஒரு சில பௌத்த இனவாத குழுக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பல்வேறு மத அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எவருமற்ற அனாதைச் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்த போது தயங்கமின்றி மிகவும் துணிகரமாக குரல் கொடுத்து உலகறியச் செய்ததுடன் இனவாதிகளிலுடன் நேரடியாக விவாதித்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த ஆஸாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இந்த நாட்டு முஸ்லிம்களை முழுமையாக கவலையடையச் செய்துள்ளது.
குறித்த ஆஸாத் சாலியின் கைது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அற்ப சொற்பமாக கொண்டிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கியுள்ளதோடு முஸ்லிம் சமூகத்தின் கருத்து சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது
இன்று ஆட்சியில் அதிகமான முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்துடன் இருந்த போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு மத அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்கிய போது துணிவுடன் குரல் கொடுத்தவர் ஆஸாத் சாலி அவரது கைது விடயத்திற்கு வேறு காரணங்களை காட்டி நியாயப்படுத்த முடியாது தான் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆஸாத் சாலி தெரிவித்த போது அதனை குற்றப்புலனாய்வு பிரிவினர் மறுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது.
இன்று ஆஸாத் சாலி கைது செய்யப்பட்ட விடயம் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுவதோடு அதற்காக என்ன விதமான நியாயங்களை தெரிவித்தாலும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்ற மனநிலையில்லை என்பதே யதாரத்தமாகும்.
ஆஸாத் சாலி தான் குற்றமற்றவர் என்றும் தனது குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் கோரி நோயுற்ற நிலையிலும் உண்ணாவிரதம் இருந்து வருவதானால் முஸ்லிம் சமூகத்திற்கு மேலும் கவலையையேற்படுத்தியுள்ளது.
எனவே முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஆஸாத் சாலியை விடுதலை செய்வதற்கு கட்சி, இனமத, பேதங்களுக்கு அப்பால் அனைத்து அரசியல் தலைமைகளும் முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Leave a comment