நீதிமன்றில் சரணடைந்த ஆளுங்கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மாணவி பாலியல் சேஷ்டை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டு பின்னர் நீதிமன்றில் சரணடைந்து எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எம்.எச்.எம்.பாக்கீர் 1இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 30ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட நீதிமன்றில் சரணடைந்த இவரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க இவரை விடுதலை செய்யுமாறு குறித்த பாக்கீர் ஆசிரியர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளான எம்.ஐ.எம்.அஜ்மீர்,  ஏ.எல்.அப்துல் கபூர் ஆகியோர் ஆட்கொணர்வு மனு (மோசன்) ஒன்றை தாக்கல் செய்ததையடுத்து குறித்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதனைப் பரிசீலித்து 1இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் குறித்த மாணவியை அழைத்துச் சென்ற அவரது காரை காத்தான்குடிப் பொலிஸில் ஒப்படைக்குமாரும் விடயம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸில் வாக்குமூலம் கொடுக்குமாறும் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக முறைப்பாடு செய்த குறித்த மாணவியையோ அவரது குடும்பத்தையோ மிரட்டவோ அச்சுறுத்தவோ கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இவர் தொடர்பான அடுத்த விசாரணை எதிர்வரும் 08ம் திகதி ஏலவே அறிவிக்கப்பட்டதைப் போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 22ம் திகதி ஓட்டமாவடி மாணவியொருவரை தனது காரில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என குறித்த மாணவி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தமையும் இது தொடர்பில் வைத்திய அறிக்கையை மேற்கொண்ட வைத்தியர்கள் எவ்வித பாலியல் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லையெனவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment