இன்று உலக தொழிலாளர் தினம்

887520601harvest3[1]உலக தொழிலாளர் தினமான இன்று கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மே தின ஊர்வலங் கள் மற்றும் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங் களில் பெருந்திரளான மக்கள், தொழிலா ளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான சகல ஏற்பாடுகளையும், அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் பூர்த்தி செய்துள்ளன. பிரதான அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் கொழும் பிலும் ஏனைய கட்சிகளும் தொழிற் சங்கங்களும் கொழும்புக்கு வெளியிலும் நடத்துகின்றன.

இதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை மக்கள் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உட்பட அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் கொழும்பில் 13 ஊர் வலங்களையும், 17 கூட்டங்களையும் நடத்துகின்றன.

அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மூன்று மே தின கூட்டங்களை இம்முறை ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரதான கூட்டம் குருநாகலில் நடைபெறவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியாவிலும், தொழிலாளர் தேசிய முன்னணி தலவாக்கலையிலும் மலையக மக்கள் முன்னணி லிந்துலவிலும் ஊர்வலங்கள், கூட்டங்களை நடத்துகின்றன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி யாழ்ப்பாண நகரத்திலும், தமிழ் மக்கள் முன்னணி நெல்லியடியிலும் புதிய ஜனநாயக மார்க்ஸ் லெனின் வாத கட்சி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலும் தமது மே தின கொண்டாட்டங்களை நடத்தவுள்ளன.

மே தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கூடுதலான கூட்டம் நடைபெறுகின்ற கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக ஆறாயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொருட்டு 10 ஆயிரம் பஸ் வண்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தரவுள்ளனர். இதனை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும் வகையில் 2981 போக்குவரத்து பொலிஸாரும், 172 ரோந்து மோட்டார் சைக்கிள் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகருக்குள் வருபவர்களின் வசதிகளைக் கருத்திற்கொண்டும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் மாற்று வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின பிரதான கூட்டம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

‘நாட்டை கட்டியெழுப்பும் மே தின அலை’ என்ற தொனிப் பொருளில் இன்று நடைபெறவுள்ள ஐ. ம. சு.மு பிரதான கூட்டத்தில் நாட்டின் பல பாகங்களி லிருந்தும் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மூத்த தொழிற்சங்க வாதியும் மேல் மாகாண ஆளுநருமான எஸ். அலவி மெளலானா தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பு ‘தாமரைத் தடாகம்’ மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ள மே தின ஊர்வலம் ஹோட்டன் சுற்றுவட்டம், கிங்ஸி வீதி, டி. எஸ். சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி ஊடாக கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தை வந்தடையவுள்ளது.

கெம்பல் பார்க் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மே தின பிரதான மேடையிலிருந்து இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெருந்திரளான மக்கள் மத்தியில் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

-தினகரன்

Published by

Leave a comment