புதிய நிருவாகிகள் தெரிவில் கைகலப்பு – காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாசலில் சம்பவம்

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி 5ஆம் குறிச்சியில் அமையப் பெற்றுள்ள ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதனால் புதிய நிருவாகிகள் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் அஸ்ஸெய்க் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.

ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் அஸ்ஸெய்க் ஜுனைட் நளீமி, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார்(பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமட்லெவ்வை, சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள், பள்ளிவாயல் ஜமாஅத்தார்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டம் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூட்டத்திற்கு வருகை தந்த ஒரு பிரிவினரின் வருகைக்கு மற்றுமொறு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டதுடன் இரண்டு சாராருக்கும் இடையில் கைலப்பும் ஏற்பட்டது. பின்னர் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி கூட்டத்தை சமாளித்தார்.

இதையடுத்து படிப்படியாக கூட்டம் ஒழுங்கு முறையாக நடைபெற்று இறுதிக்கட்டத்தில் நிருவாக தெரிவுக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட் கூட்டத்தை வழிநடாத்திக் கொண்டிருந்த நிலையில் பள்ளிவாயல் ஜமாஅத்தார் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்த போது மீண்டும் கூட்டத்தில் வாய்த்தர்க்கம் ஏற்படவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாகவும் இதனால் இரு சாராருக்கும் இடையில் கைகலப்பும் ஏற்பட்டதாகவும் இதையடுத்து கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தான் முஸ்லிம் சமய பன்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் ,வக்பு சபை பிரதிநிதிகளுக்கும் அறியப்படுத்தியுள்ளதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் அஸ்ஸெய்க் ஜுனைட் நளீமி மேலும் தெரிவித்தார்.

குறித்த இக்கைலப்பு பள்ளிவாயலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பள்ளிவாயலுக்கு வெளியே இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment