காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 83 வது வருடாந்த விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (26) மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மைதானத்தில் கல்லூரியின் அதிபர் யூ.எல்.முபாரக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெப்பை, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாத், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஒமர், இக்பால், றூமி ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் அணிநடையில் முதலாம் இடத்தினை ஒமர் இல்லமும், இரண்டாம் இடத்தினை இக்பால் இல்லமும், மூன்றாம் இடத்தினை றூமி இல்லமும், இல்ல அலங்காரத்தில் முதலாம் இடத்தினை றூமி இல்லமும், இரண்டாம் இடத்தினை இக்பால் இல்லமும், மூன்றாம் இடத்தினை ஒமர் இல்லமும் பெற்றுக் கொண்டது.
324 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை ஒமர் இல்லமும், 320 புள்ளிகளைப் பெற்று இக்பால் இல்லம் இரண்டாம் இடத்தினையும், 291 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினை றூமி இல்லமும் இந்ந வருடம் பெற்றுக் கொண்டன.
இம்முறை 2013ம் ஆண்டு இடம்பெற்ற 83 வது வருடாந்த விளையாட்டு போட்டியின் இறுதியில் 324புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை ஒமர் இல்லம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
நாடளாவிய ரீதியில் இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் முதலாவது இடத்தினை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பெற்றுக்கொண்டாலும் காத்தான்குடிப் பிரதேசம் 63சதவீதத்தைப் பெற்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
கல்விசார் நடவடிக்கைகளில் அதிகூடிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Leave a comment