– அப்துல் பாஸித்
காத்தான்குடி: தெற்காசிய நகரங்களுக்கிடையிலான உச்சிமாநாடு 2013 கடந்த ஏப்ரல் 17,18 ஆம் திகதிகளில் இந்தியாவின் புது டில்லி நகரில் உள்ள ஹோட்டல் இம்பீரியலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நகர முதல்வர்களும், உள்ளுராட்சி சேவையைச் சேர்ந்த பல அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் எமது காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களும் கலந்து கொண்டார்.
இம்மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் தொடக்க உரையை மாநாட்டின் நிறைவேற்று ஆலோசகர் திருமதி. ஹன்ஸா பட்டேல் வழங்கினார். அதனைத் தொடர்ந்து விசேட உரையொன்று எமது நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கௌரவ ரோஹன திஸாநாயக்க அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. மேலும் ஹட்டன் நகர சபை தலைவர் திரு.நந்தகுமார் அவர்களினால் விடய ஆய்வொன்றும் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
குறித்த உச்சிமாநாட்டில் நகர உட்கட்டமைப்பு வசதிகள், சக்தி வலுவாக்கல், நகரங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள், நகர மயமாக்கலினால் ஏற்படும் காலநிலை மாற்றம், நிலக்கீழ் நீர் குறைவடைதல், திண்ம மற்றும் இலத்திரணியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களால் ஆய்வுச் சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இரண்டாம் நிகழ்வின் இறுதியில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நகர முதல்வர்களின் ஒன்றியம் ஒன்று தாபிக்கப்பட்டது. குறித்த ஒன்றியத்தின் தலைவராக டாக்டர் ஜடின் முடி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் அனைத்து உறுப்பினர்களினதும் இரண்டு நிமிட சமர்ப்பணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேற்படி உச்சிமாநாட்டிற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர் ஜனாப்.ஹமீட் அவர்களும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Leave a comment