காத்தான்குடி: நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது மாணவி ஒருவரை காத்தான்குடிக்கு வெளியில் தனது வாகனத்தில் (கார்) அழைத்துச் சென்று, பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காத்தான்குடி நகரசபை ஆளும் கட்சி உறுப்பினரும், பொருளியல் ஆசிரியருமான எச்.எம்.எம். பாக்கீர் அவர்கள், தனக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தீயைக் களைந்தெறிந்து, பொதுமக்கள் முன்னிலையில் உண்மையைத் தெரிவிக்கத் தயாராகி வருவதாக நம்பகமான தகவல்கள் தற்பொழுது எமக்குக் கிடைத்திருக்கின்றன.
இச்சம்பவம் இடம்பெற்ற திங்கட்கிழமை மாலையிலிருந்து இன்றுவரை பாக்கீர் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும், அவருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஆளும் கட்சியின் அரசியல் பிரமுகர்களும், ஊரின் பிரதான அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கும் சில உறுப்பினர்களும், பாக்கீர் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களும் இரவு பகலாக தங்களை அர்ப்பணித்து வருவதை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மோட்டார் சைக்கிள்கள், இரகசிய வாகனங்கள் சகிதம் ஓட்டமாகவே களத்தில் இறங்கி இருக்கும் மேற்படி நபர்களைப் பார்க்கும் போது, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் குறித்த சம்பவம் விடயத்தில் ஓர் முடிவு பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்படும் அல்லது அறிவிக்கப்படும் ஓர் நிலையினை தற்பொழுது அறிய முடிகிறது.
திங்கட்கிழமையிலிருந்து இன்றுவரை பொதுமக்கள் மத்தியில் ‘தலைமறைவாக இருக்கும் பாக்கீர் அவர்களை மேற்படி பிரமுகர்கள் எவ்வாறு சந்தித்து அவரைத் தொடர்பு கொள்கின்றனர்?’ என்பது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக மக்கள் விசனப்படுவதையும் காணமுடிகிறது.
‘தப்புச் செய்யாதவர் என்றால் எதற்கு ஓடி ஒழிய வேண்டும் எனவும், எதற்காக அரசியல் பிரமுகர்களின் ஆதரவுகளை ஒழிந்திருந்து பெறவேண்டும் ? ‘ எனவும் மக்கள் மேலும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இதற்கிடையில், மேற்படி பிரமுகர்கள் திங்கட்கிழமையிலிருந்து பாக்கீர் அவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி வருவதாகவும், பொது அமைப்புக்களிடம் பொறுமையைக் கையாண்டு அவசரப்படாமல் நிதானமாக இவ்விடயத்தைக் கையாள வேண்டும் என அன்புக் கட்டளைகள் விடப்பட்டதாகவும் மேலும் செய்திகள் கசிகின்றன.
எப்படி இருந்த போதிலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் பாக்கீர் அவர்களால் பொதுமக்கள் முன்னிலையில் தான் குற்றம் புரிந்தவனா? அல்லது குற்றமற்றவனா? என்பதை அவரது வாயினால் கூறக்கூடிய ஏற்பாடுகள் நிதானமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதையும் ஊகிக்க முடிகிறது.
‘பாக்கீர் அரசியல் செல்வாக்கை வைத்து தப்பித்தாலும், ‘நான்கு எழுத்து கட்சிக்காரா்களின் ஆதரவாளர்கள்’ இந்த ‘கேஸை’ மேலும் மேலும் பெரிது படுத்த முயற்சி செய்து வருவதாக ஊரின் பிரபல நபர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
‘யார் அந்த நான்கு எழுத்துக்காரங்க என கூறமுடியுமா?’ என எம்மால் வினவப்பட்டதற்கு, புன்னகையை பதிலாக உதிர்ந்துவிட்டு போய்விட்டார்!
(நான்கு (சுருக்க) எழுத்துக்களில் பிரதானமாக 3 கட்சிகள் காத்தான்குடியில் இருப்பதை வாசகர்கள் கருத்திற்கொள்க).
எது எப்படி இருந்த போதிலும் திரைக்கு மறைவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இக்குறித்த சம்பவங்களின் மேலதிக தகவல்களை ஊடுறுவிப் பெறுவதில் பல சிரமங்கள் இருந்தபோதிலும், தீர்ப்பு என்ன என்பதே இன்றைய காத்தான்குடி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்துவருகிறது
இதற்கான பதில் பாக்கீர் அவர்களால் நேரடியாக அல்லது துண்டுப்பிரசுரம் மூலமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment