வியட்நாம்: தற்பொழுது வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அங்கு வின்ஹ் புங் பிராந்தியத்தில் உள்ள பௌத்த மடாலயத்தில் அதன் பிரதம பிக்கு டிச் கெயின் நகுயெட் தேரரை சந்தித்து உரையாடினார்.
பிரதம பிக்கு வியட்நாமின் பௌத்தத்தின் வரலாறு பற்றிக் கூறினார். இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, இலங்கைக்கு தமது புதல்வர் அரஹத் மஹிந்த ஊடாக பௌத்த சாசனத்தை அறிமுகப்படுத்திய அதே காலகட்டத்தில் ஒரு பௌத்த தூதுக்குழுவை வியட்நாமுக்கும் அனுப்பி வைத்ததாக அவர் கூறினார்.
வரலாற்று ஆதாரங்களின் படி, குலபாஉர் ராஷிதீன்களில் மூன்றாமவரான உதுமான் இப்னு அப்வான் (ரலி) கலீபாவாக பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் தூதுவர் ஒருவரை வியட்நாமுக்கு அனுப்பி வைத்ததாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
வியட்நாமின் சில பிராந்தியங்களில் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிப்பதோடு அழகிய பள்ளிவாசல்களும் அங்கு அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. பிரதம பிக்கு டிச் கெயின் நகுயெட் தேரர் அமைச்சர் ஹக்கீமுக்கு நினைவுச் சின்னமொன்றையும் அன்பளிப்புச் செய்தார்.

![Hakeem[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/hakeem1.jpg?w=114&h=150)
Leave a comment